அக்காவுக்காக ஹால்டிக்கெட்டில் புகைப்படத்தை மாற்றி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய இளம் பெண்!
young girl wrote exam for her sister
கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் தமிழகத்தில் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது.
இதற்காக திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு மதுரையை சேர்ந்த 26 வயது நிரம்பிய பெண் தேர்வு எழுதினார். ஆனால் அந்த பெண்ணிற்கு பதிலாக, அவரது தங்கை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த தேர்வாளரின் தங்கை, ஹால்டிக்கெட்டில் தனது புகைப்படத்தை ஒட்டி அக்காவுக்காக தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள தமிழ்நாடு வணிகவியல் நிறுவன சங்கம் சார்பில் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில், அந்த பெண் மீது அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து சகோதரிகள் 2 பேரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.