புதுச்சேரியில் இளம் பெண் டாக்டர் தற்கொலை.. அறையில் சிக்கிய உருக்கமான கடிதம்!
புதுச்சேரியில் இளம் பெண் டாக்டர் தற்கொலை.. அறையில் சிக்கிய உருக்கமான கடிதம்!
புதுச்சேரி வெங்கட்டா நகர் 2-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் (68). ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரியான இவரது மனைவி விமலா (55). இவர்களது மகள் டாக்டர் யோகலட்சுமி (26). இவர் கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.டி. நுரையீரல் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்தார்.
தேர்வுக்கு தயாராகி வந்த யோகலட்சுமி, கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பெற்றோருடன் உணவு சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால், பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பெற்றோர் அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது யோகலட்சுமி படுக்கையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் சில மருந்து பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கனவுகளுடன் காத்திருந்த திருமணம்.. திடீரென வந்த போன் கால்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகடை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் யோகலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மருந்துகளை தவறாக பயன்படுத்தியதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, யோகலட்சுமியின் அறையில் இருந்த டைரியை போலீசார் சோதனை செய்தபோது, அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியதாக கூறப்படுகிறது. அதில், தனது முடிவுக்கு யாரும் பொறுப்பல்ல என்றும், இதற்காக பெற்றோர் மற்றும் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் உருக்கமாக எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பெரியகடை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தாக்குதல் + பாலியல் தொல்லை.. மன உளைச்சலில் விவசாயி தற்கொலை! ராமநாதபுரத்தில் பரபரப்பு!