கோவை மாணவர் உக்ரைன் இராணுவத்தில் இணைவு.. கண்ணீரில் பெற்றோர்கள்.. உளவுத்துறை விசாரணை.!
கோவை மாணவர் உக்ரைன் இராணுவத்தில் இணைவு.. கண்ணீரில் பெற்றோர்கள்.. உளவுத்துறை விசாரணை.!
உக்ரைன் - ரஷியா போர் 13 நாட்களாக தொடர்ந்து வரும் நிலையில், அங்கு கல்வி மற்றும் வேலைக்காக சென்ற இந்தியர்கள் இந்திய அரசால் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த இளைஞர் உக்ரைன் இராணுவத்தில் இணைந்து ரஷியாவுக்கு எதிராக போரிட்டு வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம், சுப்பிரமணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). இவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ஜான்சி லட்சுமி. தம்பதிகளுக்கு சாய் நிகேஷ், சாய் ரோஹித் என்ற 2 மகன்கள் உள்ளனர். சாய் நிகேஷுக்கு இந்திய இராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
12 ஆம் வகுப்பு முடித்து இந்திய இராணுவத்தில் இனைய முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், 2 முறையும் உயரம் குறைவு காரணமாக தோல்வியுற்றார். அதனைத்தொடர்ந்து, அமெரிக்க இராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம் என விரும்பி, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அணுகியுள்ளார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் கலந்துகொண்டால், அங்கும் சாய் நிகேஷுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இதனையடுத்து, ஏரோ நாட்டிகள் எஞ்சினியரிங் படிக்கலாம் என முடிவெடுத்து, கடந்த 2019 ஆம் வருடம் உக்ரைனில் உள்ள கார்கிவ் ஏரோஸ்பேஸ் பல்கலை.,யில் சேர்ந்துள்ளார்.
கடந்த ஜூலை மாத விடுமுறையின் போது இந்தியா வந்து சென்ற சாய் நிகேஷ், உக்ரைனுக்கு சென்றாலும் தினமும் பெற்றோரிடம் தவறாமல் பேசி வந்துள்ளார். கடந்த மாதத்தில் பெற்றோரிடம் தொடர்பு கொண்ட சாய் நிகேஷ், தனக்கு கேம் டெவலப்மென்ட் நிறுவனத்தில் பகுதிநேர வேலை கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
அதனை பெற்றோர்கள் பாராட்டினாலும், படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளனர். நடப்பு வருடம் ஜூலை மாதத்துடன் சாய் நிகேஷுக்கு படிப்பு நிறைவடையவிருந்த நிலையில், உக்ரைன் - ரஷியா போர் ஏற்பட்டதால் பெற்றோர் மகனை இந்தியா வந்துவிட வலியுறுத்தியுள்ளனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த சாய் நிகேஷ், நான் வீடியோ கேம் நிறுவனத்தில் வேலைக்கு சேரவில்லை. இராணுவ ஆசை இருந்ததால், ஜார்ஜியா நேஷனல் லெஜியன் துணை இராணுவ பிரிவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதில் தான் பணியாற்றி வருகிறேன். உக்ரைன் படைகளுக்கு ஆதராக ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு பதறிப்போன பெற்றோர் மகனை ஊருக்கு வா என்று பலமுறை அழைத்தும் பலனில்லை. கடந்த சில நாட்களாகவே அவரின் அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளார். வெளியுறவுத்துறை உளவுத்துறைக்கு தகவலை தெரிவிக்கவே, மத்திய - மாநில அரசு உளவுத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.