ஐயோ.. இப்படியா சாவு வரணும்! திருமண பேனர் சரிந்து விழுந்ததால் நேர்ந்த அதிர்ச்சி... கணவர் உயிரிழப்பு! மனைவி கவலைக்கிடம்... திருவள்ளூர் அருகே நடந்த கொடூர சம்பவம்..!!!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சாலையோர திருமண பேனர் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவர் லாரி மோதி உயிரிழந்தார். மனைவி கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த திருமண பேனர் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி விபத்தில் சிக்கினர். இதில் பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் கணவர் செஞ்சய்யா (38) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி ரேணுகா (34), மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பேனர் சரிந்து விழுந்ததால் நிலைதடுமாறிய தம்பதி
ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் பகுதியில் சாலையோரம் திருமண பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக செஞ்சய்யா தனது மனைவி ரேணுகாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பேனர் திடீரென சரிந்து விழுந்ததில் வாகனத்தில் சென்ற இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர்.
டிப்பர் லாரி ஏறியதில் கணவர் பலி; மனைவி கவலைக்கிடம்
அந்த நேரத்தில் பின்னால் வந்த டிப்பர் லாரி, சாலையில் விழுந்த செஞ்சய்யா மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த ரேணுகா மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்துக்குப் பிறகு தப்பியோடிய டிப்பர் லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
நீதிமன்றத் தடையையும் மீறி தொடரும் பேனர் கலாசாரம்
பொது இடங்களில் பேனர்கள் வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்ததைத் தொடர்ந்து, பொது இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு நீதிமன்றங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. இருப்பினும், தடையை மீறி பல இடங்களில் பேனர்கள் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. உள்ளாட்சி நிர்வாகங்களின் கண்காணிப்பு குறைபாடும் இதுபோன்ற ஆபத்துகளுக்குக் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஷாக் நியூஷ்! 5 ஆண்டு மட்டுமே கால அவகாசம்..! தவறினால் வேலையே காலி ... ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட புதிய சுற்றறிக்கை..!!!