பண்டிகை நேரத்தில் பலமடங்கு உயர்ந்த தக்காளியின் விலை! அதிர்ச்சியில் மக்கள்
the sudden price hike of tomato in tamilnadu

தமிழகத்தில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்ற வாரம் விற்ற விலையைவிட இன்று இரண்டு மூன்று மடங்கு அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் கிலோ ஒன்றுக்கு ரூ.60 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த வாரம் தான் 5 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கும் சில இடங்களில் 3 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இந்த சமயத்தில் தக்காளியின் விலை உயர்வைக் கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டு தக்காளியின் விலை 40 ரூபாயாகவும் பெங்களூர் தக்காளியின் விலை 60 ரூபாயாகவும் உள்ளது. இங்கு இருந்து மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் நாட்டுத்தக்காளியை ரூபாய் 50 க்கும் மேல் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் குண்டல்பெட், நஞ்சன்கோடு, ஈரோடு மாவட்டம் நாச்சிபாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் தக்காளியின் அளவு மிகவும் குறைந்துள்ளதே இதற்கு காரணம். தற்போது பனிக்காலம் என்பதால் தக்காளியின் உற்பத்தி மிக மிக குறைவு. இதனால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிடு, கிடு என உயர்ந்து இருக்கிறது.
இதே நிலை தான் இன்னும் சில காலங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அரசு இது குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தலாம் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.