தமிழகத்தில் வரும் புதன்கிழமை பால் விநியோகம் நிறுத்தம்! ஆவின் உட்பட எந்த பாலும் கிடைக்காது! மாபெரும் போராட்டம்...
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.15 உயர்த்த கோரி, அக்டோபர் 22 முதல் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் விநியோகத்தை நிறுத்தி விவசாயிகள் மாபெரும் போராட்டம் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் நஷ்டம் மற்றும் அரசின் கவனக் குறைவு குறித்து பல மாதங்களாக எழுந்து வரும் பேச்சுவார்த்தைகள் தீர்மானமில்லாமல் தொடரும் நிலையில், விவசாயிகள் கடும் நடவடிக்கைக்கு முனைந்துள்ளனர்.
பால் விலை உயர்வு கோரிக்கை
தமிழக விவசாய சங்கம் அறிவித்ததாவது, பசும்பாலின் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.15 உயர்த்த வேண்டும் என்பது தங்களின் முதன்மை கோரிக்கை. ஆவின் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது வழங்கும் விலை, பால் உற்பத்திக்கான உணவு, கால்நடை தீவனம், பருத்திக்கொட்டை முதலிய செலவுகளை ஈடு செய்யாததால், விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 22 முதல் விநியோக நிறுத்தம்
அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத நிலையில், அக்டோபர் 22-ம் தேதியிலிருந்து ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்படும். மாநிலம் முழுவதும் தங்கள் கால்நடைகளுடன் தேசிய நெடுஞ்சாலைகளில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. ரூ.90,000ஐ நெருங்குகிறது.!
பால்கோவா சர்ச்சையும் கண்டனமும்
இந்நிலையில், ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் தலா ரூ.210 மதிப்புள்ள 250 கிராம் பால்கோவாவை கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய முயற்சிப்பதாக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என சங்கத் தலைவர் வேலுசாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்த போராட்டம் வெகுவிரைவில் மாநிலம் தழுவிய பால் தட்டுப்பாட்டை உருவாக்கும் ஆபத்து இருப்பதாகவும், விவசாயிகளின் கோரிக்கையை அரசு தாமதமின்றி பரிசீலித்து தீர்வு எடுப்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: Breaking: வரலாறு காணாத புதிய உச்சம்.. ரூ.90,000ஐ கடந்தது சவரன் தங்கம்.!