மீண்டும் ஊருக்குள் புகுந்த சின்னத்தம்பி; கும்கியாக மாற்றபடுமா? நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!
sinnaththampi elephant return in village

சின்னத் தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த மனு தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சோமையனூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டு யானை அப்பகுதியில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட தென்னை, கரும்பு, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி பெரும் அட்டூழியம் செய்து வந்தது.
இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர். இருந்தாலும் தினந்தோறும் நடக்கும் இச்சம்பவம் மக்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதனால் காட்டு யானையின் மீது ஒருபுறம் கோபம் இருந்தாலும் அதற்கு சின்னதம்பி என்று பெயரிட்டு செல்லமாக அழைத்து வந்தனர்.
இந்நிலையில் சுற்றித் திரிந்த சின்னதம்பி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பட்ட நிலையில் பொள்ளாச்சி டாப் ஸ்லிப் வரகளியாறு வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி காட்டு யானை கடந்த இரு தினங்களாக அங்கலக்குறிச்சி, தேவனூர் புதூர் ,சாலையூர், உட்பட பல்வேறு கிராமங்களில் சுற்றித் திரிகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மாநில வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சின்னதம்பி யானையை கூண்டில் அடைத்து கும்கியாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை எனவும் இந்த யானையை பிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், பொள்ளாச்சி ஜெயராமனும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் வனத்துறை அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சின்னத்தம்பி காட்டு யானையை மீண்டும் வனப் பகுதியிலேயே விட வேண்டும், அதை கும்கியாக மாற்றக் கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் வழக்கறிஞரும் விலங்குகள் நல ஆர்வலருமான அருண் பிரசன்னா என்பவர், சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற தலைமை வழக்கறிஞர், நீதிபதிகள் சுப்பிரமணியம் பிரசாத் மற்றும் மணிக்குமார் அமர்வுக்கு வழக்கு விசாரணையை மாற்றினார். அந்த வழக்கு இன்று மதியம் 2.30 மணியளவில் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.