தலைவிரித்து ஆடும் தண்ணீர் பிரச்சனையால் பள்ளிகளுக்கு விடுமுறை! தவிக்கும் மாணவர்கள்!
school leave for water issue

கடும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கமாக சனிக்கிழமைகளில் இயங்கும் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன.
நீண்ட நாட்களாக மழையின்மை காரணமாக தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் சனிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளன. இதற்கு முன்னர் இந்தப் பள்ளிகள் சனிக்கிழமைதோறும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், இந்த பிரச்சினை பள்ளிகளையும் விட்டுவைக்கவில்லை. பள்ளியில் மாணவர்களுக்கு தலா 3 லிட்டர் குடிநீர் கூட வழங்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதே பிரச்னை நீடித்தால் பள்ளிகள் இயங்குவதற்கு பெரும் சிரமம் ஏற்படும் என கூறப்படுகிறது.