×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்.! எப்போதிலிருந்து தெரியுமா.? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

18 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்உச்சம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா நோயாளிகள் ஆபத்தான கட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த மருந்து போதுமான அளவு கிடைப்பது இல்லை. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் அலைமோதும் நிலை உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் வருகிற 18ஆம் தேதிமுதல், தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும், சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே இவ்வாறு நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினரிடம் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிகக் கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கமுடியாத சூழல் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால், அதனைத் தவிர்க்க வேண்டியுள்ளது. மேலும், ரெம்டெசிவிர் மருந்து ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சிறிது பலன் தருவதாகவும், மற்ற நோயாளிகளுக்கு இதனால் பெரிய அளவில் பலன் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனமும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

எனவே பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்தை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நோயாளிகளின் குடும்பத்தினருக்கு இந்த மருந்தை வாங்குவதற்கான சீட்டை அளித்து, அவர்களை வாங்கிடப் பணிக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து வரும் 18 ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Remdesivir #private hospitals
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story