சிதறி போன பிஞ்சுகளின் வாழ்க்கை! கேட்கவே நெஞ்சு பதறுதே!! பாவம் அந்த குடும்பம்...
ராணிப்பேட்டை அருகே பள்ளிக்குச் சென்ற தாத்தா மற்றும் 3 குழந்தைகள் பயணித்த ஸ்கூட்டர் மீது ஐஸ்கிரீம் வேன் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு சிறுவன் சிகிச்சையில் உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த தாத்தா மற்றும் குழந்தைகள் பயணித்த ஸ்கூட்டர் மீது ஐஸ்கிரீம் வேன் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒரு சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் வேன் ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளிக்குச் சென்ற வழியில் நேர்ந்த சோகம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வேலு தையல் கடை நடத்தி வந்தார். அவரது பேரக் குழந்தைகளான அஜய், குணஸ்ரீ மற்றும் உறவினர் நிர்மலாவின் மகன் அஸ்வந்த் ஆகியோர் காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று காலை குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக வேலு தனது ஸ்கூட்டரில் அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
தகவலின்படி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் அருகே சென்றபோது, சென்னையிலிருந்து வேலூர் நோக்கி வந்த ஐஸ்கிரீம் வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரின் பின்புறத்தில் பலமாக மோதியுள்ளது.
மூவர் உயிரிழப்பு
மோதலின் தாக்கத்தில் ஸ்கூட்டரில் இருந்த நால்வரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு கடுமையாக காயமடைந்தனர். இதில் வேலு, குணஸ்ரீ மற்றும் அஸ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய அஜய் உடனடியாக மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தப்பியோடிய ஓட்டுநர் கைது
இந்த சாலை விபத்து தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த சரக்கு வேன் ஓட்டுநர் ஜெயசூர்யா என்பது தெரியவந்தது.
அதன்பின் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற வழியிலேயே தாத்தா மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த இந்த துயர சம்பவம் ஓச்சேரி மற்றும் காவேரிப்பாக்கம் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிதறி போன பிஞ்சுகளின் வாழ்க்கை! கேட்கவே நெஞ்சு பதறுதே!! பாவம் அந்த குடும்பம்...