புதிய காற்றழுத்த தாழ்வுநிலை! தமிழகத்தில் கொட்டி தீர்க்கவிருக்கும் மழை! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!
rain in tamilnadu

தமிழகத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். இதனால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சென்னை மக்கள் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் கடும் அவஸ்தை பட்டுவந்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தற்போது பெய்துவரும் தென் மேற்குப் பருவமழை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களை புரட்டிப்போட்டு வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், பல பகுதிகள் வெள்ள காடாகியுள்ளன.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் எனவும், டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.