பள்ளிக்கு அனுமதி வாங்கித் தருகிறோம்.. பல கோடி மோசடி?.. அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு!
பள்ளிக்கு அனுமதி வாங்கித் தருகிறோம்.. பல கோடி மோசடி?.. அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு!
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்புடைய சென்னை முதல் திருச்சி வரையிலான 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம், தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகை வசூலித்து மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு இன்று தொடக்கம்!
இந்த வழக்கின் விசாரணையில், பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டது தொடர்பான பல்வேறு புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அன்பில் மகேஷுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 6 இடங்களிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் லஞ்சம் பெறப்பட்டதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகி நந்தகுமார் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அன்பில் மகேஷ் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அவருக்கு சட்ட நோட்டீசும் அனுப்பப்பட்டிருந்தது.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், முந்தைய ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க பணம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு அன்பில் மகேஷ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நடைபெறும் போலீஸ் விசாரணை மற்றும் சோதனை நடவடிக்கைகள் மூலம், தனியார் பள்ளி அங்கீகாரம் தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.