தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மரணம்.. கோவை மருத்துவமனையில் சோகம்.!
பிறந்து ஒரு மாதமான பெண் குழந்தை தாய்ப்பால் குடித்த சில மணிநேரங்களில் உயிரிழந்தது.
கோவை மருத்துவமனையில் 1 மாத பெண் குழந்தைக்கு தாய் பால் கொடுத்தபோது இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், காமநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அனில். இவரது மனைவி பூஜா (வயது 20). தம்பதிக்கு கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் சமீபத்தில் ஸ்ரீனி என்ற குழந்தை பிறந்துள்ளது. பிறந்து ஒரு மாதமாகும் இந்த குழந்தையை பெற்றோர் கவனித்து வந்துள்ளனர்.
குழந்தைக்கு பால் கொடுத்த தாய்:
இதனிடையே பூஜாவுக்கு அவ்வப்போது கடுமையான தலைவலி மற்றும் கால் வலி பிரச்சனை இருந்து வந்ததால் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார். கடந்த மாதம் 28ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிகாலை சுமார் 4 மணி அளவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததாக தெரிய வருகிறது.
இதையும் படிங்க: 'என் பிள்ளை போயிடுச்சு பா' - வாய்க்காலில் அடித்துச்செல்லப்பட்ட ஒன்றரை வயது குழந்தை.. உடல் நடுங்கி கதறியழுத தாய்.!
அசைவின்றி குழந்தை:
பெண் குழந்தை உறங்கியதை தொடர்ந்து, காலை 7 மணிக்கு எழுந்து பார்த்தபோது குழந்தை அசைவின்றி இருந்துள்ளது. இதனால் அதிர்ந்த அனில் மற்றும் பூஜா மருத்துவருக்கு தகவல் தெரிவித்த நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். குழந்தை இறந்த துக்கம் தாளாமல் தம்பதி கதறியழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
கதறியழுத குடும்பம்:
இதனை அடுத்து தகவலறிந்த ரேஸ் கோர்ஸ் காவல்துறையினர் நேரில் வந்து குழந்தையின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்ததால் குழந்தை உயிரிழந்ததா? என விசாரணை நடந்து வருகிறது.