கொரோனா ஊரடங்கால் 23 வருடங்களுக்கு பிறகு தனது குடும்பத்துடன் சேர்ந்த மனநோயாளி..! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்.!
Man rejoined with family after 23 years due to lockdown

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வரும் மே 3 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சாலை ஓரங்களில் வசித்துவந்த பெரும்பாலான மக்கள் உணவு இன்றி தவித்துவருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சில அறக்கட்டளைகள் மூலம் அந்த பகுதிகளில் சுற்றித்திரிந்த மனநோயாளிகளை மீட்டு, மாநகராட்சிக்கு சொந்தமான மண்டபத்தில் தங்கவைத்து உணவும் வழங்கிவருகின்றனர். மேலும், முடி, தாடி வளர்ந்து மிகவும் கோரமாக இருந்த பலருக்கு அவர்களே முடி வெட்டி, ஷேவிங் செய்தும் வருகின்றனர். அந்த வகையில் அறக்கட்டளை சார்பாக முடிவெட்டப்பட்டு, ஷேவிங் செய்யப்பட்ட சிலரின் புகைப்படங்கள் வாட்ஸப்பில் பரவியது.
அந்த புகைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வேல்முருகனும் ஒருவர். கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் ஒருசாலை விபத்தில் தனது மனைவி உயிர் இழந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் வேல்முருகன். அன்றில் இருந்து இவரை அவரது பிள்ளைகள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில்தான் வேல்முருகனின் புகைப்படம் வாட்ஸப்பில் வந்ததை பார்த்த அவரது மகன்கள் மாநகராட்சி மண்டபத்துக்கு நேரில் சென்று வேல்முருகன்தான் 23 வருடங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டுக் காணாமல்போன தன் தந்தை என கூறியுள்ளனர்.
இதனை அடுத்து வேல்முருகன் அவரது பிள்ளைகளிடம் ஒப்படைக்கப்பட்டு 23 வருடங்களுக்கு பிறகு தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் 23 வருடம் தனித்திருந்த ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்தது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.