வாடகை கொடுத்தால் தான் வீட்டிற்குள் விடுவேன்! சாவியை பறித்துக்கொண்ட வீட்டு உரிமையாளர்! தற்கொலையை தவிர வழியில்லை என கண்ணீர்!
house owner not allowed tenent
கரூர் மாவட்டம் தாந்தோணிமலை சிவசக்தி நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த தர்மராஜ்-லோகேஷ்வரி தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், தாங்கள் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறோம். கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் நாங்கள் எங்கள் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றோம்.
தற்போது ஜூன் 16 ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வாடகை செலுத்தினால் தான் வீட்டிற்குள் வரவேண்டும் என வீட்டின் உரிமையாளர் சாவியை பறித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் செய்வதறியாது கடந்த ஒருவாரமாக அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களில் சாப்பிட்டு விட்டு, உறவினர் வீட்டில் தங்கி வருகிறோம்.
எங்களுக்கு வாடகை செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்கி வீட்டின் சாவியை மீட்டு தரவேண்டும். இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இதே போன்ற சூழ்நிலை சென்னையில் பலருக்கு உருவாகி உள்ளது. அதிகப்படியானோர் கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். தற்போது நான்கு மாதங்களுக்கு மேல் ஆனதால் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களுக்கு போன் செய்து உங்களின் அட்வான்ஸ் பணம் கழிந்துவிட்டது. இனிமேல் வாடகை கொடுத்தால் வீட்டில் இருங்கள் இல்லாவிட்டால் வீட்டை காலி செய்துவிடுங்கள் என கூறுகின்றனர்.
ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து, எப்படியாவது உயிரை காப்பாற்றிக்கொள்வேம் என சொந்த ஊரில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்களிடம், வீட்டின் உரிமையாளர்கள் போன் செய்து கஷ்டப்படுத்தும் செயல் அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துகிறது. இது தொடர்பாக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையம் வாயிலாக குமுறலுடன் கேட்டுக்கொள்கின்றனர்.