சம்பளத்தை முன்பணமாக கேட்ட ஊழியர்! ஓட்டல் முன்பே தீக்குளித்து உயிரைவிட்ட ஊழியர்!
hotel employee suicide front of hotel
தமிழகத்தில் சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு பிரபலமான ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள இந்த ஓட்டலின் கிளையில் தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த உதயசங்கர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். உதயசங்கருக்கும் திவ்யா என்ற பெண்ணிற்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
உதயசங்கர் வேலை பார்த்த அதே ஓட்டலில் அவரது உறவினர் அஜித் என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அஜித் ஓட்டலில் உள்ள பணத்தை எடுத்துவிட்டு, ஊருக்கு சென்று விட்டதால், இனிமேல் அஜித் மீண்டும் பணிக்கு வர மாட்டார் என எண்ணி அவரது உறவினரான உதயசங்கரிடம் ஓட்டல் நிர்வாகம் ‘நீ தான் பணம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த உதயசங்கர் சில நாட்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டு நேற்று முன்தினம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் தலைமையகத்துக்கு சென்று, தனது சம்பளத்தை முன்பணமாக தாருங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் பணம் தர மறுத்ததால் மனவேதனை அடைந்த உதயசங்கர், திடீரென அங்கேயே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதனையடுத்து படுகாயமடைந்த உதயசங்கரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த உதயகுமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.