18 நாட்கள் கடந்து.. 200 மீட்டர் தொலைவில் சிக்கிய முக்கிய ஆதாரம்! 5 பேரை மடக்கி பிடித்த சிபிசிஐடி... செஞ்சி சிறுமி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்..!!!
விழுப்புரம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடி சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் 5 பேரிடமும் விசாரணை நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி 18 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. பிறந்தநாள் கொண்டாடிய இரவே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 5 தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன.
5 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி விசாரணை
சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாததால், வழக்கின் விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 8 நாட்களுக்கும் மேலாக அதிகாரிகள் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஆரம்பத்தில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்திய விதம், அப்போது ஏதேனும் முக்கியத் தகவல்கள் தவறவிடப்பட்டனவா என்பது குறித்தும் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மூதாட்டி கூறிய தகவலால் புதிய கோணம்
சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வசிக்கும் மூதாட்டி ஒருவர், சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் தனது வீட்டுக் கதவை இரண்டு முறை தட்டியதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலைத் தொடர்ந்து, அந்த நபர் யார், அவர் சிறுமி காணாமல் போனதுடன் தொடர்புடையவரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மூதாட்டியிடமும் கூடுதல் விவரங்கள் கேட்கப்பட்டு வருகின்றன.
மேல்மலையனூரில் 5 பேரிடம் விசாரணை
இதன் தொடர்ச்சியாக, ஆலம்பூண்டியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 5 பேரைப் பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 18 நாட்களாகியும் சிறுமி குறித்து உறுதியான தகவல் கிடைக்காததால், ஹேமலதா விரைவில் மீட்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பில் ஆலம்பூண்டி கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.