7 வயது சிறுமி மாயமான வழக்கில்.. சிபிசிஐடி கேட்ட ஒரே கேள்வியால் ஆடிப்போன தாய்! இரவு நடந்தது என்ன? கிடுக்குப்பிடி விசாரணயில் திடீர் திருப்பம்..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தாய் பவானியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சிறுமியைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாடிய இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி காணாமல் போனது . 14 நாட்களாகத் தேடியும் சிறுமி குறித்த தகவல் கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிறந்தநாள் கொண்டாடிய இரவில் மாயமான சிறுமி
ஆலம்பூண்டியைச் சேர்ந்த ஹேமலதா, கடந்த 11-ஆம் தேதி தனது 7-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானதாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கிணறுகள், கரும்புத் தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் தேடியும் சிறுமி பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதனால் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி கீதா தலைமையிலான குழுவினர் ஆலம்பூண்டியில் முகாமிட்டு விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை
வழக்கு தொடர்பாகச் சிறுமியின் தாய், தந்தை மற்றும் பாட்டியிடம் பள்ளி வளாகத்தில் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாகப் பிறந்தநாள் கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு மட்டும் புதிய ஆடைகள், கேக், சாக்லேட்டுகள் வாங்கி விழா நடத்தியது ஏன், அதில் யார் யார் பங்கேற்றனர் என்பது குறித்தும் அதிகாரிகள் கேள்விகள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, சிறுமியின் தாய் பவானியை மட்டும் செஞ்சி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி அதிகாரிகள், சுமார் ஒரு மணி நேரம் தனியாக விசாரித்தனர். சிறுமி மாயமான இரவில் வீட்டில் என்ன நடந்தது, அவர் காணாமல் போனதற்குப் பின்னால் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை முடிந்ததும் பவானியைப் பேருந்தில் ஏற்றி போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி எங்கே? பல்வேறு கோணங்களில் விசாரணை
சிறுமியின் தாய் மற்றும் பாட்டியிடம் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், சிறுமி கடத்தப்பட்டிருக்கலாமா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் மாயமானாரா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். சிறுமியின் குடும்பத்தினர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் விசாரணையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றன; இதுவரை யாருடைய தொடர்பும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இதுவரை தேடுதல் பணியில் சிறுமி தொடர்பான முக்கியத் தடயம் கிடைக்காத நிலையில், அவர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தையும் போலீசார் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமி கடத்தப்பட்டு வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா என்பது உள்ளிட்ட கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது. ஹேமலதாவைக் கண்டுபிடிக்கத் தேடுதல் பணியும் விசாரணையும் தொடர்ந்து வருகின்றன.
இதையும் படிங்க: 7 வயது சிறுமி மாயமான வழக்கில் தீடீர் திருப்பம்! கண்ணீருடன் கதறும் தாய்... ஜோதிடர் சொன்ன அதிர்ச்சி தகவல்...!!!