பென்ட்ரைவில் கிடைத்த வீடியோ! தோண்ட தோண்ட வெளிவரும் அடுத்தடுத்த அதிர்ச்சிகள்! ஜெம் வீரமணி பாலியல் வழக்கு 4 லிருந்து 5 ஆக உயர்வு..!!!
ஜெம் கிரானைட் குழும தலைவர் வீரமணி மீது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகாரில் ஏற்கனவே 4 வழக்குகள் உள்ள நிலையில், திருவண்ணாமலை பெண் அளித்த புதிய புகாரால் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், ஜெம் கிரானைட் குழும தலைவர் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் புதிய புகார் அளித்துள்ளார். இதையடுத்து வீரமணி மீதான வழக்குகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
பென்ட்ரைவில் கிடைத்த வீடியோ; விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பென்ட்ரைவ் ஒன்றை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அதில், வயதான நபர் ஒருவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிப்பது போன்ற வீடியோ பதிவுகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த வீடியோவில் இருப்பவர் வீரமணி என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 7 முதல் 16 வயது சிறுமிகளுக்கு சொகுசு பங்களாவில் நடந்த கொடூரம்...! சிக்கிய வீடியோ ஆதாரங்கள்... போக்சோ வழக்கில் அதிர்ச்சி திருப்பம்...!!!
தேனாம்பேட்டை வீட்டில் சிறுமிகளை அழைத்து வந்ததாக புகார்
விசாரணையில், சிறுமிகளை பாலியல் ரீதியாக சுரண்டுவதற்காக தேனாம்பேட்டையில் தனியாக வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். அந்த வீட்டில் வீரமணியின் கூட்டாளி சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் தங்கியிருந்ததாகவும், அவர்களது உதவியுடன் வறுமையில் இருந்த சிறுமிகளை அழைத்து வந்ததாகவும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அந்தச் சிறுமிகளை சில முக்கிய பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் பாலியல் சுரண்டலுக்காக அனுப்பியதாகவும் விசாரணை தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் போலீசார் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
வீடுகள், அலுவலகங்களில் சோதனை; SIT விசாரணை தீவிரம்
வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் 8-ம் தேதி வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கில் மேலும் சில முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், விசாரணையை விரிவுபடுத்த சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, வழக்குடன் தொடர்புடைய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
புதிய புகாரால் 5 ஆக உயர்ந்த வழக்குகள்
வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சிறையில் உள்ள வீரமணி மீது சென்னை மாநகர காவல்துறை குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அல்லது புகார் அளிக்க விரும்புவோர் 9345319676 என்ற சிறப்பு செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் SIT அதிகாரிகளிடம் வீரமணிக்கு எதிராக புதிய புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஆதாரங்களை சேகரித்து வரும் SIT அதிகாரிகள், விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING: போக்சோ வழக்கில் கைதான ஜெம் கிரானைட்ஸ் வீரமணி உள்ளிட்ட 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்..!!