×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மசினகுடி விபத்து! நடந்தது என்ன? முழு விபரம் இதோ!

Full details of masinagudi road accident

Advertisement

 

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்த கப்பல் கேப்டன் ஜூட் ஆன்டோ கெவின்(33).  சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ரவிவர்மா,   வியாசர்பாடியைச் சேர்ந்த மெக்கானிக் இப்ராஹிம் (35),  செல்லம் நகர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜெயகுமார்(37),  பெரம்பூரைச் சேர்ந்த மருந்து விற்பனைப் பிரதிநிதி அமர்நாத்,  கொளத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராமராஜேஷ் (38), பெரம்பூரைச் சேர்ந்த அருண் ஆகிய 7 பேர் உதகைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இவர்கள் 7 பேரும் ஜூட் ஆன்டோவுக்குச் சொந்தமான காரில் செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று உதகையிலுள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்துள்ளனர். இந்த விடுதியில் ஜூட்  ஆன்டோ உறுப்பினர் என்பதால் அவரது பெயரிலேயே அறை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நண்பர்கள் 7 பேரும் மசினகுடி பகுதிக்கு டிரெக்கிங் செல்வதாகக்கூறி அக்டோபர் 1 ஆம் தேதி காலையில் விடுதி பொறுப்பாளரிடம் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து டிரெக்கிங் செல்வதாக கூறிவிட்டு சென்ற நண்பர்கள் யாரும் அன்று இரவும், மறுநாளும் அந்த விடுதி நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளவில்லையாம். 

இந்நிலையில் மறுநாள் புதன் கிழமை அதாவது அவர்கள் தங்களது அறையை காலி செய்யவேண்டிய நாள். ஆனால் அன்றும் அவர்கள் விடுதிக்கு வராததால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரது தகவலை தொடர்ந்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

நண்பர்கள் 7 பேரின் தொலைபேசி சிக்னலை ஆதாரமாக கொண்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில்  சிக்னல் கடைசியாக உல்லத்தி பகுதியில் காட்டியதை அடுத்து மசினகுடி பகுதியில்தான்  கார் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தனர். 

இந்நிலையில்,  35-ஆவது கொண்டை ஊசி வளைவில் கார் பள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து புதுமந்து காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, 5 பேர் தலையில் பலத்த காயத்துடன் உடல் நசுங்கிய நிலையில் இறந்தும், இருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும் கண்டனர். 

உடனடியாக அவர்களை மீட்டதில் காயமடைந்தவர்கள் ராமராஜேஷ்,  அருண் ஆகியோர் என்பதும்,  உயிரிழந்தவர்கள் ஜூட் ஆன்டோ கெவின்,  ரவிவர்மா, இப்ராஹிம்,  ஜெயக்குமார், அமர்நாத் என்பதும் தெரியவந்நது. 

உயிருடன் மீட்கப்பட்ட அருண், ராமராஜேஷ்  ஆகிய இருவரும் உதகை அரசு மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் சுய நினைவிழந்து விட்டதால் இருவரையும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் விபத்து நடைபெற்று சுமார் 50 மணி நேரத்துக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து கேள்வியுற்றதும்  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோர் தலைமையில் மாவட்ட  வருவாய் அலுவலர் செல்வராஜ்,  உதகை வருவாய்க் கோட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்டோர் விபத்து நடைபெற்ற இடத்துக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தினர். 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் உதகைக்கு விரைந்துள்ளனர். அவர்கள் வந்த பின்னரே  இறந்தவர்கள்  குறித்த முழு விவரங்களும் தெரியவரும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Masinagudi #Masinagudi accident #Road accident #Trucking accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story