தயவுசெய்து இதை பண்ணுங்க..! அப்போ தான் மரணங்களைத் தடுக்க முடியும்! 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இதெல்லாம் கொண்டு வாங்க... டாக்டர் சிவரஞ்சனியின் வேண்டுகோள்!
பள்ளிக் கல்வியில் முதலுதவி பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும் என டாக்டர் சிவரஞ்சனி கோரிக்கை. CPR, Golden Hour விழிப்புணர்வு குழந்தைகள் உயிர்காப்புக்கு அவசியம்.
அவசர நேரங்களில் சரியான முதலுதவி கிடைக்காமல் பல குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக் கல்வியிலேயே உயிர்காக்கும் திறன்களை கற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்த சூழலில், பள்ளி மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும் என டாக்டர் சிவரஞ்சனி மத்திய அரசை நோக்கி வலியுறுத்தியுள்ளார்.
Golden Hour முக்கியத்துவம்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவசர காலங்களில் முதல் 4 நிமிடங்கள் எனப்படும் Golden Hour மிக முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் சரியான முதலுதவி அளிக்கப்பட்டால், உயிரிழப்புகளை பெரிதும் குறைக்க முடியும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
மாணவர்களுக்கு CPR பயிற்சி
12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு CPR உள்ளிட்ட முதலுதவி பயிற்சிகளை வழங்கினால், அவர்கள் பள்ளி மற்றும் வீடுகளில் ஏற்படும் அவசர நிலைகளில் தைரியமாக செயல்பட்டு விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் நம்பிக்கையைப் பெறுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையில் சேர்க்கும் முயற்சி
இந்த உயிர்காக்கும் திறன்களை தேசிய கல்விக் கொள்கை (NEP)யில் ஒரு பாடமாக இணைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகத்தின் MyGov தளம் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம். CPR, மூச்சுத்திணறல், வலிப்பு போன்ற அவசர நிலைகளுக்கான முதலுதவி முறைகளை பள்ளிகளில் செயல்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத் தலைமுறைக்கு பயன்
தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT), 7-ஆம் வகுப்பு முதல் உடல்நலம் மற்றும் உடற்கல்விப் பாடத்தின் கீழ் இந்தப் பயிற்சிகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கலாம். இத்தகைய விழிப்புணர்வு முயற்சிகள், எதிர்காலத் தலைமுறையை பொறுப்புள்ளவர்களாகவும், ஆபத்து நேரங்களில் உதவத் தயார் நிலையில் இருப்பவர்களாகவும் மாற்றும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உயிர் காக்கும் கல்வி என்பது இனி விருப்பமல்ல; அவசியம் என்பதே இன்றைய காலத்தின் உண்மை.