Edappadi Palanisamy: அரசு ஊழியர்களுக்கு மிட்டாய் கொடுத்த திமுக அரசு - எடப்பாடி கே. பழனிச்சாமி கடும் தாக்கு.!
Edappadi Palanisamy Latest Pressmeet: சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள திமுக ஆட்சியில், டிஜிபி கூட நியமனம் செய்ய முடியவில்லை என திருச்சி விமான நிலையத்தில் இன்று (பிப்.08, 2026) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி விரைவில் முறிய வாய்ப்புகள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் & அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று (பிப்.08) தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து பேசி இருந்தார். வேளாண் நிலங்களுக்கு நேரில் சென்று, விவசாயிகளின் குறைகளையும் கேட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் பேசியவாதவது,
டிஜிபி நியமனம் செய்யப்படாதது ஏன்?
"TNPSC குரூப் 2 & 2A தேர்வு தேர்வு மைய குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது கூட தெரியாமல் தேர்வெழுதி இருக்கிறார்கள். விடியா திமுக அரசு TNPSC தேர்வை கூட சரியாக நடந்த இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு நிரந்தர டிஜிபி இல்லை. உச்சநீதிமன்றம் மாநில அரசு உரிய காலத்தில் டிஜிபியை நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மாநில நிதியை கேட்டு பெறுவதில்லை:
மத்திய அரசு மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை மட்டுமே கொடுக்க முடியும். அதிமுக ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து திட்டங்கள் பெறப்பட்டன. ஆனால், திமுக அரசு அதனை தவிர்க்கிறது. மத்தியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தது. அப்போது, எவ்வுளவு நிதியை பெற்றார்கள். தமிழகத்தின் ப. சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது கூட திமுகவால் மாநில நிதியை பெற முடியவில்லை. ஆனால், அதிமுக அரசு ஆட்சி இருந்தபோது பல திட்டங்களுக்கு நிதிஉதவி பெற்றோம்.
2026ல் அதிமுக ஆட்சி தான்:
கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் ரத்து செய்யப்பட திமுக அரசே காரணம். உரிய ஆவணங்களை தயார் செய்யாமல் அனுப்பினால் மத்திய அரசு அதனை எப்படி ஏற்றுக்கொள்ளும். காங்கிரஸ், திமுக இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் முடிவு செய்வார்கள். ஸ்டாலின் பொருந்தாத கூட்டணி என கூறுவதில் எந்த கருத்தும் இல்லை. காலசூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைவது இயல்பு ஆகும். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சொல்லும் கருத்தும், திமுகவின் இரண்டாம்கட்ட தலைவர்களின் கருத்தும் கூட்டணி உடைவதை ஏறக்குறைய உறுதி செய்கிறது. அதிமுக கூட்டணி தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெரும்.
அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்:
அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தும்போது, குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து சரி செய்வது போல திமுக அரசு ஆசிரியர்கள் & அரசு ஊழியர்கள் போராட்டத்தை அமைதிப்படுத்தி வைத்துள்ளது. இந்த விஷயத்துக்கு ஒருசில சங்கங்களும் துணைபோயுள்ளன. அரசு ஊழியர்கள் சங்கத்துக்குள்ளேயே மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது" என பேசினார்.