டேட்டிங் ஆப் பழக்கத்தால் சோகம்.. திண்டுக்கல் டிஎஸ்பி மகன் கைது.. பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.!
கோவையில் இளம்பெண்ணை மிரட்டி பணம்பறித்ததாக DSP மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் டிஎஸ்பி தங்கபாண்டியன் மகன் தருண் பெண்ணை கடத்திச் சென்று பணம், நகை பறித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பெண்ணுக்கு டேட்டிங் செயலி உபயோகம் செய்யும் பழக்கம் இருந்ததாக தெரியவருகிறது. டேட்டிங் ஆப் மூலமாக தருண் என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
பணம் பறித்தனர்:
இவர்கள் இருவரும் பேசி பழகி வந்த நிலையில், இருவரும் நேரில் சந்தித்தனர். அப்போது, பெண்ணை காரில் அழைத்துச் சென்ற தருண், தனது கூட்டாளியான மற்றொரு இளைஞரை வரவழைத்து இருக்கிறார். இருவரும் சேர்ந்து பெண்ணிடம் 3 சவரன் தங்க நகை, கூகுள் பெ உதவியுடன் ரூ.90,000 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
டிஎஸ்பி மகன் கைது:
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தருண் திண்டுக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கபாண்டியனின் மகன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தருணை கைது செய்த காவல்துறையினர், அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.
காவல் உயர் அதிகாரியின் மகன் பெண்ணிடம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ளது, மாநில அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.