×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடரும் லாக்கப் மரணம்.. "எல்லை மீறும் அராஜகம்" - தவெக கண்டனம்..!

காவல்துறை விசாரணையில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு தவெக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மானாமதுரையில் காவல்துறையினரின் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதோடு காவல் நிலைய மரணங்களும் அதிகரித்து வருவதாக தமிழக வெற்றிக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஆகாஷ் காவல்துறையினர் விசாரணையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இது தொடர்பான விஷயத்துக்கு தவெக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. 

தவெக கண்டனம்:

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், "தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதோடு, காவல் நிலைய மரணங்கள் (Custodial Deaths) கவலைக்குரிய வகையில் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர், காவல்துறை விசாரணையில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! ஊருக்குள் அரிவாளுடன் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டிய கும்பல்..! பகீர் வீடியோ..!!!

தொடரும் மரணங்கள்:

கடந்த மார்ச் 6-ம் தேதி ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ், காவல்துறையினரின் பிடியில் இருந்தபோது மேம்பாலத்திலிருந்து குதித்து தப்ப முயன்றதாகவும், அதில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுக்கும் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், காவல்துறையினரின் கடுமையான தாக்குதலே இந்த மரணத்திற்கு காரணம் எனப் குற்றம் சாட்டி வீதிக்கு வந்து போராடி வருகின்றனர்.

அஜித்குமார் லாக்கப் மரணம்:

குறிப்பாக, கைது செய்யப்பட்ட இளைஞரை முறையாக விசாரணைக்கு அழைத்துச் செல்லாமல், வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாக உறவினர்கள் எழுப்பும் புகார் மிகவும் தீவிரமானது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞர் இதே போன்றதொரு சூழலில் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருப்பது, மானாமதுரை பகுதியில் காவல்துறையின் அராஜகம் எல்லை மீறிச் செல்வதையே காட்டுகிறது.

திமுக அரசுக்கு எதிராக கேள்வி:

பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையே, ஒரு குடிமகனின் மரணத்திற்கு காரணமாக அமைவது ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அரங்கேறி வரும் இத்தகைய மனித உரிமை மீறல்களைத் தடுக்கத் தவறியது ஏன்? "விடியல் அரசு" என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த ஆட்சியில், காவல் நிலையங்கள் மரணக் கூடாரங்களாக மாறி வருவது தொடர்கதை ஆகிவிட்டது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

எனவே, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைப்பதோடு, தகுந்த இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். மேலும், தமிழகத்தில் இனி ஒரு காவல் மரணம் கூட நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய திமுக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Custodial Death #லாக்கப் மரணம் #sivagangai #சிவகங்கை #Akash Death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story