இனி அரசு பேருந்து எங்க, எப்போ வரும்னு தெரிஞ்சுக்கலாம்..! புதிய செயலி அறிமுகம்..!
Chalo app introduced to find government bus location

சென்னை மாநகர பேருந்துகள் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள புது செயலி ஓன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தை பொறுத்தவரை 700-க்கும் மேற்பட்ட வழித் தடங்களில் சுமார் 3,300 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தங்கள் அன்றாட பணிகளுக்கு செல்லும் பெரும்பாலான மக்களுக்கு பேருந்து மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில், போக்குவரத்துக்கு நெரிசல் போன்ற பல காரணங்களால் சில நேரங்களில் பேருந்து சரியான நேரத்திற்கு வருவதில் சிக்கல் எழுகின்றது.
இதனால், பேருந்து வருகிறதா இல்லையா? பேருந்து எங்கே வந்துகொட்டிருக்கிறது என தெரியாமல் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்நிலையில், பேருந்து வந்து கொண்டிருக்கிறது என்ற விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் ‘சலோ’ (Chalo) என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாநகர பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் கருவி மூலம் இந்த செயலி செயல்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட பேருந்தின் எண்ணை கொண்டு தேடினால் பேருந்துகள் இயக்கம், வழித் தட விவரங்கள், அடுத்தடுத்து வரும் பேருந்துகளின் இடைவெளி நேரம் போன்ற தகவல்களை மக்கள் எளிமையாகப் பெறலாம்.