கஜா: "அடேங்கப்பா! இவ்வளவு பாதிப்புகளா?" அதிர்ச்சியடைந்த மத்திய குழு! உடனே மதிப்பிட முடியாது என தகவல்
central team shocking about gaja effect
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நவம்பர் 16ம் தேதி 130 கிலோமீட்டர் வேகத்தில் அடித்த கஜா புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின.
குறிப்பாக நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் விவசாய நிலங்கள், பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டன மற்றும் குடிசை, ஓட்டு வீடுகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் முழுவதும் சேதம் அடைந்துவிட்டன. பல இடங்களில் வீட்டிற்கு முன் நின்று கொண்டிருந்த மரங்கள் வீடுகளின் மேல் விழுந்து வீடுகள் தரைமட்டமாகி விட்டன. இவ்வாறு கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் எண்ணிலடங்காதவை. அவை அனைத்தையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால் அவ்வளவு எளிதான முடியுமா என்ன? இந்த சேதங்களை மதிப்பிட வந்த மத்திய குழுவானது இவை அனைத்தையும் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றது.
இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது. நேற்று முதலமைச்சருடன் நடைபெற்ற 3 மணி நேர ஆலோசனைக்கு பின்பு, விமானம் மூலம் திருச்சி வந்த மத்தியக் குழுவினர், புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருந்ததியர் காலனி பகுதியில் ஆய்வு தொடங்கிய மத்திய குழுவினர், புயலால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர், வடகாடு, மாங்காடு, வடக்குப்பட்டி உள்ளிட்ட 8 பகுதிகளில் வாழை, தென்னை உள்ளிட்டவைகளின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். காலதாமதமானதால் 5 இடங்களில் நடைபெற இருந்த ஆய்வு கூட்டம் ஆனது ரத்து செய்யப்பட்டு கடைசியாக கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்துடன் நிறைவுபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழு தலைவரும், உள்துறை இணை செயலாளருமான டேனியல் ரிச்சர்ட், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சேத மதிப்பீட்டை உடனடியாக கணக்கிட முடியாது என்றும் தெரிவித்தார். முழு ஆய்வு முடிந்த பின் இந்த மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். 27ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிட்டு இருக்கிறோம். ஆய்வு பணியில் 7 பேர் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். இன்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் ஆய்வு செய்ய இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.