மதுக்கடைகளை மூட ஊராட்சிகளுக்கு அதிகாரமளிக்க சட்டம்! நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு அன்புமணி வரவேற்பு!
Anbumani talk about judges questions

மதுக்கடைகளை மூட ஊராட்சிகளுக்கு அதிகாரமளித்து சட்டம் இயற்ற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு சில வினாக்களை எழுப்பியுள்ளது. மதுக்கடைகளை மூடும் அதிகாரத்தை கிராம ஊராட்சிகளுக்கு வழங்கி ஏன் சட்டம் இயற்றக்கூடாது? அதேபோல் பொது இடங்களில் மது குடிப்பதை ஏன் தடை செய்யக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினாக்களை எழுப்பினர்.
மதுக்கடைகளை மூடும் அதிகாரத்தை கிராம ஊராட்சிகளுக்கு வழங்க தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சியையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தொடர்ந்து வலியுறுத்தப்படுவது குறித்த விவரங்களைக் கேட்ட நீதிபதிகள் மேற்கண்ட வினாக்களை எழுப்பியதை பாமக வரவேற்கிறது என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.