அதிரவைத்த டி.டி.வி. தினகரன்! பயங்கர குஷியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்!
AMMK is formally registered

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்ட பின், டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக் கட்சி தொடங்கினர். ஆனால் அந்த கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சியால் போட்டியிடமுடியவில்லை. இதனால், அமமுகவைச் சேர்ந்தவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர்.
இந்நிலையில், அமமுக, இந்தியத்தேர்தல் ஆணையத்தில் நேற்று கட்சியாகப் பதிவு செய்தது. அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரிதும் கொண்டாடி வருகிறார்கள்.
அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்கள் பிரதிநிதி சட்டத்தின்படி கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அ.ம.மு.க.வை பதிவு செய்வதற்காக நாங்கள் அனுப்பிய ஆவணத்தை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துவிட்டு ஆட்சேபனை குறித்து தெரிவிப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க அறிவுறுத்தியது.
இதனைத்தொடர்ந்து ஜெயலலிதா பெயரை பயன்படுத்தக்கூடாது என்று அ.தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த ஆட்சேபனைகளுக்கு, நாங்கள் உரிய விளக்கத்தை கொடுத்தோம். எங்கள் விளக்கத்தை ஏற்று தேர்தல் ஆணையம் அ.ம.மு.க.வை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ நகல் திங்கட்கிழமை கையில் கிடைக்கும் என்று அவர் கூறினார்.