கடவுளுக்கே சோதனையா? ஊரின் காவல் தெய்வம்! சிவலிங்கம், நந்தி சிலைகள் உடைப்பு... கோவிலில் மர்ம நபர்கள் நடத்திய கொடூரத் தாக்குதல்...!!!
பெலகாவி கானாப்பூர் அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தேஸ்வரா கோவிலில் சிவலிங்கம், நந்தி உள்ளிட்ட புனித அமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாப்பூர் தாலுகாவில் உள்ள சித்தேஸ்வரா கோவில் வளாகத்தில் மர்ம நபர்கள் புகுந்து புனித அமைப்புகளை சேதப்படுத்தியுள்ளனர். சிவலிங்கம், நந்தி சிலை உள்ளிட்டவை உடைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கானாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குன்றின் மீது அமைந்துள்ள பழமையான கோவில்
நிட்கல் கிராமத்தின் எல்லையில் உள்ள குன்றின் மீது சித்தேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள புனித அமைப்புகள் ‘சித்தகுண்டா’ என அழைக்கப்படுகின்றன. நிட்கல் கிராமத்தின் காவல் தெய்வமாகவும் இக்கோவில் வழிபடப்பட்டு வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த ஆலயம், பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: மாயமா? மந்திரமா? 3 மாதங்களாக ஒரே இடத்தில் நிற்கும் ஆடு! அருகில் சென்றால் மறைந்துவிடுமா? பக்தர்களை பரவசப்படுத்தும் ஆன்மீக அதிசய காட்சி...!!!
சிவலிங்கம், நந்தி உள்ளிட்டவை சேதம்
சமீபத்தில் கோவில் வளாகத்துக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்ததாக கூறப்படுகிறது. அங்கு இருந்த சிவலிங்கம் மற்றும் நந்தி சிலை உள்ளிட்ட புனித அமைப்புகள் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆமை வடிவ அமைப்பும் கோவில் முன்புறத்தில் இருந்த பிருந்தாவனமும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர்.
குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை
கோவில் புனித அமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் கானாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் தொடர்புடையவர்களை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்றும், கோவில் வளாகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். புகாரை தொடர்ந்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட ஆதாரங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.