விஜய் சேதுபதியின் அரசியல் பேச்சு எதிரொலி… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி?
விஜய் சேதுபதியின் அரசியல் பேச்சு எதிரொலி… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 10’ நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது விஜய் டிவி நிர்வாகம் அதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் சாத்திகாவிடம் தலைமைப் பண்பு குறித்து விஜய் சேதுபதி பேசும்போது, தலைவருக்கான தகுதி மற்றும் பொறுப்புகள் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அப்போது, தலைமைப் பண்பு என்றால் என்னவென்று புரிந்துகொள்ளாமல், வாக்குறுதிகளை அளித்துவிட்டு, பிரச்னைகள் மற்றும் பொறுப்புகள் வரும்போது எதிரணி மீது பழியைச் சுமத்திவிட்டு ஓடுவது தலைமைக்கான தகுதி அல்ல, அது ஏமாற்று வேலை என்ற கருத்தில் அவர் பேசியிருந்தார்.
விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அவரது கருத்துகள் தற்போதைய அரசியல் சூழலுடன் ஒப்பிடப்பட்டதுடன், தமிழக வெற்றிக் கழகத்தினரை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தது.
இதையும் படிங்க: கரூர் விவகாரம்?.. 2 சொட்டுக் கண்ணீருக்கு மயங்காதீர்கள்.. தவெகா-வை மீண்டும் சீண்டிய விஜய் சேதுபதி!
இந்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளான நிலையில், விஜய் தொலைக்காட்சி தனது சமூக வலைதளப் பக்கங்களில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் வழக்கமான விதிமுறைகள் மற்றும் விளையாட்டு சூழலுக்கு உட்பட்டு வழங்கப்படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், உரையாடல்கள் மற்றும் கருத்துகள் அனைத்தும் நிகழ்ச்சியின் கதைக்களம் மற்றும் போட்டி சூழலுக்கு உட்பட்டவை மட்டுமே என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் தெரிவிக்கப்படும் எந்தவொரு கருத்தும், நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள தனிநபர், அமைப்பு, நிறுவனம் அல்லது அரசியல் கருத்தியலை பிரதிநிதித்துவப்படுத்தவோ விமர்சிக்கவோ செய்யப்படவில்லை என்றும் விஜய் டிவி குறிப்பிட்டுள்ளது.
மேலும், நிகழ்ச்சியின் பொழுதுபோக்கு நோக்கத்திற்கு அப்பாற்பட்டு, அதில் இடம்பெறும் கருத்துகளை வெளிப்புற நிகழ்வுகளுடன் ஒப்பிடுவதற்கு நிகழ்ச்சிக் குழு பொறுப்பல்ல என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் பேச்சு தொடர்பாக சர்ச்சை நீடித்து வந்த நிலையில், விஜய் டிவியின் இந்த அதிகாரப்பூர்வ விளக்கம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திமுக சொம்பு என சாடிய பிரசாந்த்.. விஜய் சேதுபதி மீது பாய்ந்த விமர்சனம்!