திமுக தலைமைக்கு ஷாக்.. திருப்பூர் மாவட்ட செயலாளரின் திடீர் முடிவு.. அடுத்தது என்ன?
Tiruppur DMK: திமுக திருப்பூர் மாவட்ட செயலாளர் க. செல்வராஜ் கட்சியின் பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.
பிற கட்சியைச் சேர்ந்த நபர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் தான் கட்சியில் இருந்து விலகுவதாக திமுக மாவட்ட செயலாளர் கடிதம் வழங்கி இருக்கிறார்.
பதவி விலகல்:
திருப்பூர் திமுக மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., க. செல்வராஜ், தன்னை திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக அவர் திமுக தலைமைக்கு கடிதமும் அனுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: நெல்லை மாவட்ட திமுகவில் உள்கட்சி பூசல்.. சொந்த கட்சியினரே எதிர்க்கும் நிலையில், தொகுதி யாருக்கு?
விசுவாசி:
அந்த கடிதத்தில், "கடந்த 1976ம் ஆண்டு முதல் கடந்த 50 ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக நான் இருந்து வந்தேன். நகர செயலாளர், சேர்மன், மேயர் என பல பொறுப்புகளை தாங்களும், மறைந்த முதல்வர் கருணாநிதியும் அளித்தார்கள். கடந்த 2011 முதல் மாவட்ட செயலாளராக இருக்கிறேன். 2021ல் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதியின் சார்பில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன்.
மாற்றுக்கட்சியினருக்கு உடனடி வாய்ப்பு?
2022ல் இருந்தே மாற்றுக்கட்சியில் இருந்து வரும் நபர்களுக்கு அதிகாரம் கொண்ட பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது எனக்கு வேதனையை தருகிறது. 2026 தேர்தலில் திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் தங்களிடம் வற்புறுத்தியதால் பேரில் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட மாற்றுக்கட்சியில் இருந்து வந்த தினேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர் திருப்பூர் மேயராகவும் இருந்தார்.
விலகுகிறேன்:
எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் நான் விருப்ப மனுவே வழங்காத பல்லடம் சட்டப்பேரவை தொகுதி எனக்கு ஒதுக்கப்பட்டது. இது எனக்கு வருத்தத்தை அளித்தது. தினேஷ் குமார் உட்பட மாற்றுக்கட்சியில் இருந்த பலருக்கும் அளித்த முக்கியத்துவத்தை, என்னைத்தவிர்த்து பிற விசுவாசிகளுக்கு அளித்திருந்தால் கூட மகிழ்ச்சி அடைந்து இருப்பேன். எனக்கு 50 ஆண்டுகால அரசியலைத் தவிர வேறு ஏதும் தெரியாது. இவ்வாறான மனவருத்தம் காரணமாக திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பு உட்பட பிற அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நான் விலகுகிறேன். பிற கட்சியில் இணையும் எண்ணமும் இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.