×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இது மாபெரும் மோசடி; சமூகநீதிக்கு எதிராக இழைக்கப்பட்ட வரலாற்று பெருந்துயரம்: சீமான் கொந்தளிப்பு..!

இது மாபெரும் மோசடி; சமூகநீதிக்கு எதிராக இழைக்கப்பட்ட வரலாற்று பெருந்துயரம்: சீமான் கொந்தளிப்பு..!

Advertisement

முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதி! வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தின் மீதானப் பேரிடி என்று சீமான் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது:-

முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருக்கும் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நூற்றாண்டு கால வகுப்புரிமைப் போராட்டத்தின் விளைவினால் கிடைக்கப்பெற்ற இடஒதுக்கீட்டினை முற்றாகக் குலைத்திடும் வகையில் வழங்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பென்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல! ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில், இரு நீதிபதிகள் முரண்பட்டாலும், மூன்று நீதிபதிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்ததன் விளைவாக, பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவெனும் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டதென்றாலும், இடஒதுக்கீட்டுக்கு பொருளாதாரத்தை அளவுகோலாக வைக்கும் முறைக்கெதிராக ஒரு நீதிபதிகூட முன்நிற்காதது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது.

இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல! அது மண்ணின் மக்களுக்கான தார்மீக உரிமை. சாதியம் புரையோடிப்போயுள்ள இந்தியச்சமூகத்தில் எல்லாத்தரப்பு மக்களுக்கும் எல்லாவிதமான வாய்ப்புகளும் கிடைக்கப்பெறுவதில்லை.அத்தகையக் குறைபாடு கொண்ட சமூகத்தை நேர்நிறுத்தவும், சமத்துவத்தை நிலைநிறுத்தவுமான செயல்பாட்டு முறையே இடஒதுக்கீடாகும். அதுவே சாதியப்பாகுபாட்டினாலும், வருணாசிரம வேறுபாட்டினாலும் காயம்பட்ட மண்ணின் மக்களின் புண்ணை ஆற்றுகிற மாமருந்தாக அமையும். சாதிய ஏற்றத்தாழ்வுகளாலும், தீண்டாமைக்கொடுமைகளாலும் பெருந்துயருக்கு ஆட்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் கல்வியினாலும், வேலைவாய்ப்பினாலும், பொருளாதாரத்தினாலும் உயர்ந்தால்தான் தங்கள் மீதான சாதிய அழுத்தங்களிடமிருந்து விடுபட்டு, சமூகச்சமத்துவத்தை அடைய முடியும் என்கிற உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இடஒதுக்கீடெனும் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவ முறை உருவாக்கப்பட்டது. பன்னெடுங்காலமாகச் சமூகத்தின் ஆழ்தளத்தில் அழுத்தி வைக்கப்பட்டு, பிறப்பின் அடிப்படையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகவே இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டதே ஒழிய, பொருளியல் பெருக்கத்துக்காக அல்ல! பொருளாதாரத்தை அளவுகோலாய் வைத்து, இடஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த முனைவதென்பது, அது உருப்பெற்றதன் நோக்கத்தையே முழுமையாகச் சிதைத்தழிக்கும் பேராபத்தாகும். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டு முறையானது வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தின் மீது விழுந்தப் பேரிடியாகும்.

இடஒதுக்கீட்டின் நோக்கம் பொருளாதார முன்னேற்றமல்ல; கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரக்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் அனைவருக்குமான இருப்பையும், பங்களிப்பையும் உறுதிசெய்வதேயாகும். அதனைச் சிதைத்து முற்பட்ட வகுப்பினருக்கு சலுகை அளித்திட முயல்வது என்பது சகிக்கவே முடியாத பெருங்கொடுமையாகும். பொருளாதாரம் என்பது மாறுதலுக்குப்பட்டது; எப்போதும் நிலையானதாக இருக்கக்கூடியதல்ல. ஆகவே, அதனை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீட்டை அளவீடு செய்வது என்பது நடைமுறை சாத்தியமற்றதும்கூட. ஆண்டொன்றுக்கு 2.5 இலட்சம் வருமானம் ஈட்டுபவர் வருமானவரி கட்ட வேண்டுமென்று ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துவிட்டு, ஆண்டுக்கு 8 இலட்சம் சம்பாதிக்கும் முற்பட்ட வகுப்பினரை பொருளாதாரத்தில் பின்தங்கியவராக அறிவித்து, அவர்களுக்கு இடஒதுக்கீட்டில் 10 விழுக்காட்டை வாரிவழங்குவது மிகப்பெரும் மோசடித்தனமாகும். அதனை சட்டப்படுத்தி, உறுதிப்படுத்தியிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பானது வரலாற்றுப்பெருந்துயரம். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்.

ஆகவே, முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக தமிழக அரசானது உடனடியாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, வலுவான சட்டப்போராட்டம் நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டுமெனக் கோருகிறேன். இத்தோடு, 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் இணைந்துபோராடுமென அறிவிப்பு செய்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#NTK #seeman #Social Justice #supreme court #reservation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story