அடுத்த ரவுண்ட்... 4000 கோடிக்கு மேல் மணல் ஊழல்! துரைமுருகன் உட்பட சிக்கிய 28 பேர்! 34 இடங்களில் சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்..!!!
தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உட்பட 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 34 இடங்களில் நடந்த சோதனையில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மணல் அள்ளப்பட்டதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உட்பட 28 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சுமார் ரூ.4,730 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒரே நேரத்தில் 34 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
28 ஆற்று மணல் குவாரிகளில் முறைகேடு புகார்
தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் செயல்பட்ட 28 ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அனுமதி வழங்கப்பட்ட 196.37 ஹெக்டேர் பரப்பளவுக்கு பதிலாக, சுமார் 987.10 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் படங்கள், ட்ரோன் காட்சிகள் மற்றும் ஜியோ ஸ்கேனிங் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் 23.64 லட்சம் யூனிட் மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மணல் எடுத்துச் செல்ல போலி அனுமதிச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்கள் மற்றும் அறப்போர் இயக்கம் அளித்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
துரைமுருகன் உட்பட 28 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த விவகாரத்தில் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முன்னாள் தலைமைப் பொறியாளர்கள் முத்தையா, ராமமூர்த்தி உள்ளிட்ட 14 அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், தனிநபர்கள் என மொத்தம் 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரத்தினம், எஸ். ராமச்சந்திரன், கரிகாலன் உள்ளிட்டோரின் பெயர்களும் வழக்கில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 34 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 825 ஆவணங்கள், 11 டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் மூன்று வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் விசாரணை
அனுமதியின்றி அதிகளவில் மணல் அள்ளப்பட்டதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆறுகளின் இயற்கையான நீரோட்டம், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், பல மாவட்டங்களில் சோதனை நடந்துள்ளதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திட்டம்போட்டு காய் நகர்த்தும் திமுக..! கனிமொழிக்கு முக்கிய பதவி.... நவ.15-க்குப் பிறகு திமுகவில் நடக்கப் போகும் நிர்வாக மாற்றம்!!!