×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெறுப்பு அரசியலை கைவிடுங்கள்; பேரறிஞர் அண்ணா வழியில் நாகரீக அரசியலை கையில் எடுங்கள்: ஓ.பி.எஸ் உருக்கமான கடிதம்..!

வெறுப்பு அரசியலை கைவிடுங்கள்; பேரறிஞர் அண்ணா வழியில் நாகரீக அரசியலை கையில் எடுங்கள்: ஓ.பி.எஸ் உருக்கமான கடிதம்..!

Advertisement

அ.தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் வெறுப்பு அரசியலை கைவிட்டு பேரறிஞர் அண்ணா அவர்களைப் போல நாகரீக அரசியலை கையில் எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது , "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்ற பாரதியாரின் வரிகளும், "திங்களோடும், செழும் பரிதி தன்னோடும், விண்ணோடும், உடுக்களோடும், பொங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழ்" என்ற பாரதிதாசன் வரிகளும் தமிழ் மொழியின் சிறப்பை நமக்கு எடுத்துரைக்கின்றன. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை பிறர் போற்றும் வண்ணம் நாகரிகமாக நாம் பயன்படுத்த வேண்டும்.

நாகரிகம் என்பது எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் தூய்மையாக நடந்து கொள்வது ஆகும். "உயர்ந்த நிலையில் இருந்தும் உயர்ந்த குணம் இல்லாதவர் சிறியர். கீழ் நிலையில் இருந்தாலும் இழிவான குணம் இல்லாதவர் பெரியோர்" என்றார் வள்ளுவப் பெருந்தகை. பேரறிஞர் அண்ணா அவர்கள் நண்பர்களோடு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது போகிற வழியில் ஒரு பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் பேசிய பேச்சாளர் பேரறிஞர் அண்ணா அவர்களை வாய்க்கு வந்தபடி வசைபாடிக் கொண்டிருந்தார். காரை நிறுத்தச் சொல்லி, ஒரு ஓரத்தில் யாருக்கும் தெரியாமல் முழுவதும் கேட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

காரில் இருந்த நண்பர் அண்ணாவிடம் "ஏன் அண்ணா உங்களை அவர்கள் வசைபாடுகிறார்கள்" என்று கேட்டார். அண்ணா பதில் ஏதும் பேசாமல் மௌனம் காத்தார். கொஞ்ச தூரம் சென்றபின், ஒரு மாட்டு வண்டியை பேரறிஞர் அண்ணா அவர்களின் கார் முந்த வேண்டி இருந்தது. ஓரமாகச் செலுத்தி மாட்டு வண்டியை கடந்தார்கள்.

அப்போது மாட்டு வண்டியை ஓட்டியவர், கார் டிரைவரை நோக்கி வசைபாடினார். அப்போது காருக்குள் இருந்த நண்பர்களிடம் பேரறிஞர் அண்ணா அவர்கள், "பார்த்தீர்களா? கார் வேகமாகக் போகிறது. மாட்டு வண்டியால் இதற்குச் சமமாக வர முடியவில்லை. அதுதான் கோபம். அதனால் நம்மை திட்டுகிறார். அவருக்குச் சமமாக நாம் வசைபாடாமல் நம் வேகத்தை அதிகரித்து, போக வேண்டிய இடத்தை அடைய வேண்டும். இந்த நிலைமையில் தான் அந்தப் பேச்சாளர் இருக்கிறார். நம் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் திட்டுவார்கள். நாம் அதைத் தாங்கி கொண்டு வளர்ச்சி வேகத்தை கூட்ட வேண்டும். பிறர் ஏசும் ஏச்சை உரமாக்கிக் கொண்டு வளர வேண்டும்" என்றார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல, நம் வளர்ச்சி, நமக்கு மக்களிடையே உள்ள ஆதரவு நம்மை நாகரிகமற்ற முறையில் பேசுபவரை கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் மக்களுடைய வெறுப்பிற்கும், தொண்டர்களுடைய கோபத்திற்கும் ஆளாகியுள்ளனர். அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த இயலாமைதான் நம் மேல் கோபமாக மாறி இருக்கிறது. இந்தக் கோபம்தான் நாகரிகமற்ற, பண்பாடற்ற, ஒழுங்கீனமான வார்த்தைகளை உபயோகப்படுத்த வைக்கிறது.

இவற்றையெல்லாம் மனதில் நிலை நிறுத்தி, அரசியல் ரீதியாக நம்மை யாராவது தாக்கினாலும், சொல்லுக்குச் சொல், வாதத்திற்கு வாதம், பேச்சுக்கு பேச்சு என்ற அளவிலே நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக நடந்து கொள்ள கொடுக்க வேண்டுமே தவிர, அவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக நாமும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#O Panneerselvam #AIADMK #ADMK Co Ordinator #Letter to Volunteers
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story