திடீர் ட்விஸ்ட்...! தவெக-வில் இணைந்த முக்கியப் புள்ளி..! சண்முகநாதனின் குடும்பத்தையே கூண்டோடு தூக்கிய முதல்வர் விஜய்..! செம ஷாக்கில் எடப்பாடி..!!!
தூத்துக்குடி அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதனின் மகள் மருத்துவர் பொன்னரசி மற்றும் அவரது கணவர் அசோக் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனின் மகள் மருத்துவர் பொன்னரசி மற்றும் அவரது கணவர் அசோக் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். தவெக மத்திய மாவட்டச் செயலாளரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் முன்னிலையில் இருவரும் கட்சியில் இணைந்துள்ளனர் . அதிமுக மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் சண்முகநாதனின் குடும்ப உறுப்பினர்கள் தவெகவில் இணைந்திருப்பது தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சராக இருந்த சண்முகநாதன்
எஸ்.பி. சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் 2001, 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகப் பதவி வகித்தவர். அதிமுக ஆட்சிக் காலத்தில் கைத்தறி, இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா மற்றும் பால்வளத்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
2021 மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்களில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக சண்முகநாதன் நியமிக்கப்பட்டு கட்சிப் பணிகளை கவனித்து வருகிறார்.
குடும்ப உறுப்பினர்கள் கட்சி மாறியதால் சலசலப்பு
இந்த நிலையில், சண்முகநாதனின் மகள் மருத்துவர் பொன்னரசி மற்றும் அவரது கணவர் அசோக் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் மாவட்டங்களில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தவெகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பொன்னரசி மற்றும் அவரது கணவர் கட்சியில் இணைந்ததன் பின்னணி குறித்த தகவல்களும் கவனம் பெற்று வருகின்றன.