×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீதமுள்ள 6 பேரையும் விடுவிக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் ஆவேசம்..!

மீதமுள்ள 6 பேரையும் விடுவிக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் ஆவேசம்..!

Advertisement

பேரறிவாளன் விடுதலையடைந்துள்ள நிலையில் மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த 7 பேரில் பேரறிவாளன் மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிக் கூறியிருப்பதாவது:-

ஆறுபேரின் விடுதலைக்கான முன்னெடுப்புகளை விரைந்து முன்னெடுத்து சாத்தியப்படுத்த வேண்டும். விடுதலையை எட்டும்வரை ஆறு பேருக்கும் நீண்ட சிறைவிடுப்பை வழங்க வேண்டும்.

ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில், நீண்ட நெடிய சட்டப்போராட்டம் நடத்தியதன் பயனாக தம்பி பேரறிவாளன் விடுதலைப்பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள ஆறு பேருக்கும் விடுதலையை விரைந்து சாத்தியப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது ஏமாற்றமளிக்கிறது. தம்பி பேரறிவாளன் தொடுத்த வழக்கின் தீர்ப்பில், அமைச்சரவைத்தீர்மானமே இறுதி முடிவென்றும், தமிழக அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தானென்றும், இவ்விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரமில்லையென்றும், விடுதலைக்கோப்பை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவதற்கு சட்டப்பூர்வப்பின்புலமில்லையென்றும் தெளிவுப்படக்கூறி, மாநிலத்தின் உரிமையை உறுதிப்படுத்தி, தமிழக அரசுக்கு வழிகாட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆகவே, அதனை அடிப்படையாகக்கொண்டு ஆறு தமிழர்களையும் விடுதலைசெய்து மாநிலத்தின் தன்னுரிமையை நிலைநிறுத்த வேண்டியது தமிழக அரசின் தார்மீகக்கடமையாகும்.

கடந்த 09-09-18 அன்று, முந்தைய அதிமுக ஆட்சியில் எழுவர் விடுதலைக்காக, 161வது சட்டப்பிரிவின்படி தமிழகச்சட்டமன்றத்தில் இயற்றப்பட்டத் தீர்மானத்திற்கு ஒப்புதலளிக்காது, காலங்கடத்தி குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் செயலைக்கண்டித்து, 142வது சட்டப்பிரிவு தரும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தம்பி பேரறிவாளனை விடுதலைசெய்தது உச்ச நீதிமன்றம். விடுதலை செய்யக்கோரும் சட்டமன்றத்தீர்மானமும், பேரறிவாளனை விடுதலைசெய்த உச்ச நீதிமன்றத்தீர்ப்பும் மீதமிருக்கும் அறுவருக்கும் பொருந்தும் எனும் அடிப்படையில் இதனைக்கொண்டு அவர்களது விடுதலைக்கான வாசலை திறந்துவிட வேண்டியது பேரவசியமாகிறது. அதனைவிடுத்து, ஆறுபேரும் தங்களுக்கான விடுதலையை தாங்களே சட்டப்போராட்டம் நடத்தி பெற்றுக்கொள்ள வேண்டுமெனும் நிலைக்கு மாநில அரசு தள்ள நினைத்தால், அது ஒருபோதும் ஏற்புடையதல்ல! தம்பி பேரறிவாளன் கொடுத்தத் தீர்ப்பின் மூலம் இவ்விடுதலை விவகாரத்தில் மாநிலத்தின் உரிமை உறுதிபெற்றுள்ள நிலையில், அதனைக்கொண்டு ஆறுபேரையும் விடுதலைசெய்வதற்குரிய வழிவகைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் முதன்மைக்கவனமெடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்வைத்து, தமிழக ஆளுநருக்கு உரிய அழுத்தம் கொடுத்து 161வது சட்டப்பிரிவின்படி இடப்பட்ட சட்டமன்றத் தீர்மானத்துக்கு ஒப்புதலைப் பெற வேண்டுமெனவும், அக்கா நளினி, தம்பி ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஏற்கனவே தொடர் விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் எஞ்சியவர்களான தம்பிகள் இராபர்ட் பயஸ், முருகன், சாந்தன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நால்வருக்கும் நீண்ட நெடிய சிறை விடுப்பு வழங்க முன்வர வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#seeman #NTK #Rajiv gandhi Case #release #6 Tamils
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story