×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காஞ்சி மக்களை கஞ்சி குடிக்க வைக்க துடிக்கும் அரசுகள்!,.. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக சீமான் கொந்தளிப்பு..!

காஞ்சி மக்களை கஞ்சி குடிக்க வைக்க துடிக்கும் அரசுகள்!,.. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக சீமான் கொந்தளிப்பு..!

Advertisement

காஞ்சிபுரத்தில் 3000 ஏக்கர் விவசாய நிலத்தை அழித்து விமான நிலையம் அமைக்கும் முடிவை மத்திய அரசும்,தமிழக அரசும் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து விமான நிலையம் அமைக்கும் முடிவை கண்டித்து அறிக்கை விடுத்துள்ள சீமான், இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து, புதிய விண்ணூர்தி நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து விண்ணூர்தி நிலையம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பயன்படும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மீனம்பாக்கம் விண்ணூர்தி நிலையத்தினை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது வேகமாக நடந்து வரும் நிலையில், அவசர அவசரமாகப் புதிய விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்கான தேவை என்ன வந்தது? என்பதை இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும். உண்ண உணவு தரும் விளைநிலங்களையும், குடிப்பதற்கு நீர் தரும் நீர்நிலைகளையும், மக்கள் வாழும் வீடுகளையும் அழித்தொழித்து அதன்மீது ஓடுபாதைகளையும், தொழிற்சாலைகளையும், வணிக வளாகங்களையும் அமைப்பதை வளர்ச்சி என்று அரசே கூறுவதை எப்படி ஏற்க முடியும்? நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள தனியார் கட்டடங்களை இடிப்பதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசு, விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்குத் தானே நீர்நிலைகளை அழிக்க முயல்வது எவ்வகையில் நியாயமாகும்?

மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப சாலைகள், இரயில் பாதைகள், விண்ணூர்தி நிலையங்கள் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வதோ, புதிதாக அமைப்பதோ அவசியம்தான் என்றாலும், அவை பயன்பாடு இல்லாத தரிசு நிலங்களில் மேற்கொள்ள வேண்டுமே தவிர விளைநிலங்களையும், வீட்டுமனைகளையும், நீர்நிலைகளையும் அழித்து உருவாக்கப்படுவதாக இருக்கக்கூடாது. கிராமப்புறங்களில் பாமர மக்களிடம் விளைநிலங்களையும், வீடுகளையும் வலிந்து அபகரிக்கும் அரசுகள், மாநகரங்களில் பெரும் செல்வந்தர்களின் வீடுகளையோ, பெருமுதலாளிகளின் சொத்துக்களையோ அழித்து, பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை எடுத்து அதன்மீது விண்ணூர்தி நிலையங்களை அமைக்கும் துணிவிருக்கிறதா? செயற்கையாக உருவாக்கப்பட்ட வணிக வளாகங்களை விட, உயிர்கள் வாழ உணவளிக்கும் விளைநிலங்கள் மதிப்பில் குறைந்தவை என்ற முடிவுக்கு அரசு வந்தது எப்படி? என்ற கேள்விக்கு ஆட்சியாளர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்.

ஆகவே, பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்துப் புதிய விண்ணூர்தி நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட்டு, மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் விளைநிலங்களோ, நீர்நிலைகளோ, வீடுகளோ இல்லாத இடத்தில் அமைக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#seeman #NTK #Tn govt #Central Govt #airport #kanchipuram
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story