×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெற்று வாக்குறுதியாக போய்விடக் கூடாது; சொன்னபடி பணி நிரந்தரம் செய்யுங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்..!

வெற்று வாக்குறுதியாக போய்விடக் கூடாது; சொன்னபடி பணி நிரந்தரம் செய்யுங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்..!

Advertisement

அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று  சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களைத் திடீரெனப் பணி நீக்கம் செய்ய முயலும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவு வன்மையான கண்டனத்திற்குரியது. மிகக்குறைந்த ஊதியம் வழங்கி அவர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டுத் தற்போது பணியிலிருந்து நீக்க முயல்வது அவர்களது வாழ்வாதாரத்தை நசித்து அழிக்கும் கொடுஞ்செயலாகும்.

2010 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 205 தற்காலிக ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியுடன், ரூ.1500 என்ற மிகக்குறைந்த ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், 2013 ஆம் ஆண்டு நிதிச்சிக்கல் மற்றும் நிர்வாக முறைகேடுகளைக் காரணம் காட்டி அண்ணாமலைப் பல்கலைகழகத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தத் தொடங்கியதால் பணி நிரந்தர உறுதிமொழியானது காற்றில் பறக்கவிடப்பட்டது. இதனால் கடந்த 12 ஆண்டுகாலமாகத் தொகுப்பூதிய பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.

கடந்த மே மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்கள், காலி இடங்களைப பொறுத்து, படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் தொகுப்பூதிய பணியாளர்கள் அக்டோபர் மாதத்துடன் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூறியிருப்பது தொகுப்பூதிய பணியாளர்களிடம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகமானது தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்படுகிறதோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதியப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை என்பது, வழக்கம்போல் இதுவும் வெற்று ஏமாற்று வாக்குறுதிதானோ? என்று எண்ணவும் தோன்றுகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காது அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்கள் 205 பேரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். மேலும், ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, ஈட்டிய விடுப்புத்தொகை, ஓய்வூதிய ஒப்படைப்புத்தொகை மற்றும் கடந்த 10 ஆண்டுகாலமாக அனைத்துவகை ஊழியர்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிவுயர்வு ஆகியவற்றையும் உடனடியாக வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#seeman #NTK #Annamalai University #Salaried Employees #Tn govt #MK Stalin
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story