அண்ணா, கலைஞர் இருந்த பேரவை இது!.. விஜய் பேச்சை கடுமையாக சாடிய ஆ.ராசா!
அண்ணா, கலைஞர் இருந்த பேரவை இது!.. விஜய் பேச்சை கடுமையாக சாடிய ஆ.ராசா!
மிசா சட்டம் தொடர்பாகவும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று (செப்டம்பர் 12) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வரின் பேச்சு மற்றும் உருவ கேலி ஆகியவற்றைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறுவதாக திமுக தெரிவித்துள்ளது.
திமுக அறிவித்தபடி, அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் சைதாப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசா, தமிழக சட்டப்பேரவைக்கு நீண்ட அரசியல் வரலாறு இருப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான விவாதங்கள் நடைபெற்றாலும், கேள்விகளுக்கு ஆட்சியில் இருப்பவர்கள் உரிய பதில்களை அளித்ததாகவும், அந்த விவாதங்கள் தமிழக மக்களுக்கு அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் தொடர்பான புரிதலை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... ஸ்டாலினை நேரில் சந்தித்த மல்லை சத்யா! அறிவாலயத்தில் நடந்த அதிரடி ட்விஸ்ட்...!!!
இதற்கு உதாரணமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடர்பான ஒரு சம்பவத்தை ஆ.ராசா சுட்டிக்காட்டினார். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் கருணாநிதிக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதாகக் குற்றம்சாட்டியதாகவும், அதற்கு கருணாநிதி சவால் விடுத்ததாகவும் அவர் கூறினார். பின்னர் அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் ஆ.ராசா தெரிவித்தார்.
அப்போது, அமைச்சர் இளம் வயதினராகவும் அனுபவம் குறைந்தவராகவும் இருந்ததால் தெரியாமல் பேசியதாகக் கூறி, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என கருணாநிதி பெருந்தன்மையுடன் கேட்டுக்கொண்டதாகவும் ஆ.ராசா குறிப்பிட்டார். இதுபோன்ற அரசியல் நாகரிகமும் முதிர்ச்சியும் தமிழக சட்டப்பேரவையில் இருந்து வந்த நிலையில், தற்போதைய நிகழ்வுகள் அதற்கு மாறாக இருப்பதாக அவர் விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க: திமுகவில் இணையும் செல்வப்பெருந்தகை? காங்கிரஸ் தரப்பில் கொடுத்த விளக்கம்! அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு..!!!