2 நாளில் ஸ்டாலின் வெளியிடப்போகும் முழு லிஸ்ட்...! எந்த மாவட்டத்தில் எந்தெந்த தொகுதி? திமுக காட்டும் அதிரடி அரசியல்...!!!
திமுகவில் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தும் மறுசீரமைப்பு அறிக்கை ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய எல்லைகள் அறிவிக்கப்பட உள்ளன.
திமுகவில் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான மறுசீரமைப்புப் பரிந்துரை அறிக்கை குழுவின் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது. புதிய மாவட்டங்களின் எல்லைகள் மற்றும் விவரங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 தொகுதிகளுக்கு ஒரு அமைப்பு மாவட்டம்
கட்சியின் செயற்குழு தீர்மானத்தின்படி, பொதுவாக ஒவ்வொரு அமைப்பு மாவட்டத்திலும் தலா 2 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெறும் வகையில் பிரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாகப் பணிகளை வேகப்படுத்துவதுடன், கட்சியில் கூடுதல் பொறுப்புகளை உருவாக்கி புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறு வயதில் தான் தவறு செய்தால் கன்னத்திலே அறைவார்! யோசிக்கவே மாட்டார்! அதே நேரத்தில்... மேடையில் கலங்கிய மு.க.ஸ்டாலின்..!!!
எனினும், சென்னை, திருச்சி, சேலம், விருதுநகர், நெல்லை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மட்டும் இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்படுகிறது. அங்கு புவியியல் அமைப்பு மற்றும் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு தலா 3 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட அமைப்பு மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.
ஓரிரு நாட்களில் வெளியாகும் புதிய மாவட்ட பட்டியல்
மாவட்ட மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய 110 மாவட்டங்களின் பட்டியல் மற்றும் அவற்றின் எல்லைப் பகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்டாலின் விரைவில் வெளியிட உள்ளார். இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் புதிய நிர்வாக அமைப்புகளை உருவாக்கும் பணிகளும் தொடங்கும்.
50 பேருக்கு புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு
மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மாவட்டச் செயலாளர்கள் தொடர்பான வயது வரம்பு மற்றும் பதவிக்கால விதிகளிலும் தாக்கம் ஏற்பட உள்ளது. இதன் காரணமாக சுமார் 13 முன்னாள் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவாகலாம். அதே நேரத்தில், அவர்களுக்கு கட்சியில் மாநில அளவிலான முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புதிய அமைப்பு மாவட்டங்கள் உருவானால், சுமார் 50 பேருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாவட்டச் செயலாளர் பதவி மீது கட்சியின் அடுத்த தலைமுறை நிர்வாகிகளிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திமுக மாவட்ட மறுசீரமைப்பு நிறைவடைந்ததும், புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.