×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரசு ஒதுக்கிய நிலத்தில் வாழ்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களா?!, இது வடிகட்டிய அயோக்கியதனம்: சீமான் கடும் கண்டனம்..!

அரசு ஒதுக்கிய நிலத்தில் வாழ்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களா?!, இது வடிகட்டிய அயோக்கியதனம்: சீமான் கடும் கண்டணம்..!

Advertisement

அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் வாழ்ந்து வரும் சென்னை, இராமாபுரம், திருமலை நகர் மக்களை, ஆக்கிரமிப்பாளர்களெனக் கூறி, விரட்டத் துடிப்பதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை, இராமாபுரம், திருமலை நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு வாழ்ந்து வரும் அடித்தட்டு உழைக்கும் மக்களை, ஆக்கிரமிப்பாளர்களெனக்கூறி, அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றத்தின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அரசின் ஒப்புதலோடு முறையாக இடத்தைப் பெற்று, அங்கு வீடுகள் கட்டி, 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமுறை கடந்து வாழ்ந்து வரும் எளிய மக்களின் இருப்புக்கெதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், அம்மக்களின் பக்கம் நின்று வழக்காட வேண்டிய தமிழக அரசு, மெத்தனப்போக்கைக் கடைபிடித்து எவ்வித முனைப்பும் காட்டாது அமைதி காத்தது கண்டனத்திற்குரியது.

சென்னை, இராமாபுரம், திருமலை நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் 276 பேருக்கு 1994ஆம் ஆண்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமானது, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் ஒப்புதலைப் பெற்று, வீட்டு மனையை ஒதுக்கீடு செய்து, பத்திரப்பதிவும் செய்யப்பட்டது. இவர்களோடு, இராமாபுரம் வண்டிப்பாதை புறம்போக்கில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தவர்களில் 77 பேருக்கும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, 2001ஆம் ஆண்டு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு அரசின் ஒப்புதலோடு, சட்டத்துக்குப் புறம்பாக அல்லாது முறைப்படி இடங்களைப் பெற்று, வீடுகளைக் கட்டி வாழ்ந்து வந்த அம்மக்களின் வாழ்விடங்களுக்கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில், அக்குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களெனக்கூறி, அந்நிலத்தைவிட்டு வெளியேற்றக் கூறியிருக்கும் நீதிமன்றத்தின் முடிவு அம்மக்களைப் பெருந்துயரத்திற்கும், மனஉலைச்சலுக்கும் ஆளாக்கியிருக்கிறது. தங்களது இருப்பிடமும், வாழ்வு சார்ந்த நிலமும் கேள்விக்குறியானதால் அப்பகுதி மக்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டுமென்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால், எளிய மக்களின் குடியிருப்புகளும், உழைக்கும் மக்களின் குடிசைகளுமே அரசுகளுக்கு ஆக்கிரமிப்பாகத் தெரிவதுதான் பெரும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. காலங்காலமாக நிலைத்து நீடித்து, வாழ்ந்து வரும் மண்ணின் மக்களுக்கு இருப்பிடச்சான்று அளித்து, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, மின் அட்டை என யாவும் வழங்கி, அவர்களை அங்கீகரித்து, அவர்களிடமிருந்து வரியைப் பெற்றுக்கொண்ட அரசுகள், திடீரென அவர்களை ஆக்கிரமிப்பாளர்களெனக் கூறி, வாழ்விடத்தைவிட்டு அகற்ற முனைவது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல. இச்சிக்கலில், அரசே சட்டத்திற்குட்பட்டு நிலங்களை ஒதுக்கீடு செய்து தந்திருக்கும் நிலையில், அதனை நீதிமன்றத்தில் எடுத்துரைத்து அவர்களது இருப்பிடங்களைக் காக்க வேண்டியது அரசின் தார்மீகக்கடமையாகும்.

ஆகவே, சென்னை, இராமாபுரம், திருமலை நகரில் வாழ்ந்து வரும் மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, உயர் நீதிமன்றத்தில் அவ்விடங்களுக்கான உரிய ஆவணங்களையும், தரவுகளையும் முன்வைத்து, அம்மக்களின் குடியிருப்புகளும், வாழ்விடங்களும் காக்கப்பட வழிவகைச் செய்ய வேண்டுமெனவும், அதுவரை வீடு, கடைகளுக்கெதிரான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#seeman #Nam Tamilar #NTK #Tn govt #chennai #Royapuram #Thirumalai Nagar
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story