தவெக அரசை பாராட்டிய அன்புமணி ராமதாஸ் ! ஆட்சி மாறினாலும் இன்னும் அதிகாரிகள் மாறவில்லை.... தற்போதைய மின்வெட்டுக்கு இவுங்க தான் காரணம் என பகிரங்க குற்றச்சாட்டு..!!!
முதல்வர் விஜயை சந்தித்த அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். இடஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
தமிழக முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநிலத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இடஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.
69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க கோரிக்கை
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக பாதுகாக்க வேண்டுமெனில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றார். மாநில அரசே நேரடியாக இந்தக் கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் ஆளுநர் உரையில் இதுகுறித்த அறிவிப்பு இடம்பெற வேண்டும் என்றும், அதை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு உரிய உரிமைகள் கிடைப்பதே உண்மையான சமூக நீதி எனவும் அவர் தெரிவித்தார்.
மத்திய சென்சஸுடன் இணைத்து நடத்த வேண்டும்
மத்திய அரசின் பொதுச் சென்சஸுடன் சேர்த்தே சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தினார். இதன்மூலம் சமூக அமைப்பு தொடர்பான தரவுகள் விரிவாக கிடைக்கும் என்றும், எதிர்கால கொள்கை முடிவுகளுக்கு அது உதவும் என்றும் கூறினார்.
தான் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் சாதகமான பதில் அளித்ததாகவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
த.வெ.க ஆட்சிக்கு பாராட்டு, அதிகாரிகளுக்கு அறிவுரை
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி குறுகிய காலத்திலேயே பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக பாராட்டினார். குறிப்பாக த.வெ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஊழல் மற்றும் லஞ்சம் கணிசமாக குறைந்துள்ளதாகவும், ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் தென்படுவதாகவும் கூறினார்.
அதே நேரத்தில், அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட்டாலும் அதிகாரிகள் இன்னும் பழைய நடைமுறையிலேயே செயல்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார். புதிய அரசு பதவியேற்று குறுகிய காலமே ஆகியுள்ளதால், அனைத்து மாற்றங்களும் உடனடியாக நிகழும் என எதிர்பார்க்க முடியாது என்றும், அரசுக்கு இன்னும் சில மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போது மாநிலத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு முந்தைய தி.மு.க ஆட்சியே காரணம் எனவும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! தமிழகத்தில் கடன் தள்ளுபடி..... முதல்வர் விஜய் கொடுத்த அதிரடி வாக்குறுதி.....!!!