# அதிர்ச்சி : செம்மலையை தொடர்ந்து ஜெயக்குமாரும் விலகலா..? 82 பேரில்... வந்தது 26 பேர் தான்! ஆள் ஆளுக்கு அடித்து தவிடுபிடியாகும் அதிமுக...!!!
சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை பல முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்தது கட்சிக்குள் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்ற நிலையில், அழைக்கப்பட்ட 82 மாவட்டச் செயலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கட்சிக்குள் நிலவும் உள்கட்டமைப்பு மோதல் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
82 பேருக்கு அழைப்பு... 26 பேர் மட்டும் பங்கேற்பு
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு மாநிலம் முழுவதும் உள்ள 82 நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன், ராஜேந்திரபாலாஜி, பி.வி. ரமணா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 26 பேர் மட்டுமே நேரடியாக கலந்து கொண்டனர்.
அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட சில மாவட்டச் செயலாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். அதே நேரத்தில், கட்சியின் பல மூத்த மற்றும் முன்னணி நிர்வாகிகள் வராதது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
புறக்கணிப்புக்கு காரணம் என்ன?
கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அணியும் தனித்தனியாக செயல்படுகின்றன என்ற பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அந்த சூழலிலேயே இந்தக் கூட்டத்தில் குறைந்த அளவிலான பங்கேற்பு பதிவாகியுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்காத மாவட்டச் செயலாளர்கள் யார், அவர்கள் ஏன் வரவில்லை என்பது குறித்து தலைமைத் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை. இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையைச் சுற்றியுள்ள உள்கட்சி அதிருப்தி குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
டி.ஜெயக்குமார் வராதது விவாதம்
அதிமுகவில் கோஷ்டி மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியில் இருந்து விலகினார். அதன் தொடர்ச்சியாக, முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான டி.ஜெயக்குமார் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காததும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையடுத்து, கட்சியின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும், உள்கட்சி பிரச்சினைகளை சமாளிக்க தலைமை எவ்வாறு செயல்படும் என்பதில் அரசியல் ஆர்வலர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து நீக்கப்படப்போகும் சி.வி.சண்முகம்.. எஸ்.பி.வேலுமணி.?! வெடித்த மோதல்.?!