சட்டப்பேரவையில் வெடித்த ரூ. 900 கோடி விவாதம்! உங்க மாமனார் தான் கொடுத்தாரு... அவர்ட்ட கேளுங்க அமைச்சர்! அடுத்த 24 மணி நேரத்தில் பாய்ந்த ED சோதனை...!!!
சட்டசபையில் லாட்டரி நிதி விவகாரம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா, உதயநிதி ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம் நடந்த நிலையில், கோவையில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லாட்டரி விவகாரம் நேற்று அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. பொது விவாதத்தின்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நடந்தது. இதற்கு மறுநாளே கோவை உள்ளிட்ட இடங்களில் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினுடன் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
லாட்டரி நிதி குறித்து சட்டசபையில் கடும் வாக்குவாதம்
மதுவிலக்கு மற்றும் சாராய ஆலைகள் தொடர்பான விவாதம் நடைபெற்றபோது, திமுக தலைவர் ஸ்டாலின் லாட்டரி நிறுவனத்திடம் இருந்து ரூ.900 கோடி நிதி பெற்றதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு முன்வைத்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் குரல் எழுப்பினர்.
இதையும் படிங்க: திமுக- விழும் அதிரடி மாற்றம்! அறிவாலயத்தில் அரங்கேறும் அடுத்தகட்ட அரசியல்.... ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!!!
அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், திமுகவுக்கு அந்த நிதியை வழங்கியதே அமைச்சரின் மாமனார் எனக் கூறினார். இதுகுறித்து அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா, நிதி ஏன் பெறப்பட்டது என்பது உதயநிதியின் தந்தைக்குத்தான் தெரியும் எனக் கூறியதால், பேரவையில் கூச்சலும் சலசலப்பும் ஏற்பட்டது.
மறுநாளே சாண்டியாகோ மார்ட்டின் நிறுவனங்களில் சோதனை
சட்டசபையில் நடந்த லாட்டரி விவகாரம் தொடர்பான கடும் மோதலுக்கு மறுநாளே, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கின் பின்னணியில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ட்டினுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவருடன் தொடர்புடைய அரசியல் கட்சி நிர்வாகிகளின் இடங்களிலும் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்த நிகழ்வுகளால் அரசியல் களம் பரபரப்பு
சட்டசபையில் ஏற்பட்ட அரசியல் மோதலும், அதற்கு அடுத்த நாளே நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைகளும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, சட்டசபையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் அமலாக்கத்துறை சோதனைக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையே, அமலாக்கத்துறை சோதனை தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகும் நிலையில் விவகாரத்தின் அடுத்த கட்டம் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.