மயக்க மருந்து கொடுத்து உடன் பணிபுரியும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பன்னாட்டு நிறுவன ஊழியர்கள்!
mnc girl gang raped by her coworkers
டெல்லி துவாரகா பகுதியில் ஒரு தனியார் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், உடன் பணிபுரியும் பெண் ஊழியரை வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கடந்த சனிக்கிழமை இரவு தனது அலுவலக பணிகள் முடிந்த பின் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அதே சமயத்தில் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய பிர்ஜு(25) மற்றும் வினோத் குமார்(30) என்ற ஊழியர்கள் அவரை செல்லும் வழியில் வீட்டில் இறக்கிவிடுவதாக கூறியுள்ளனர். உடன் பணிபுரிபவர்கள் தானே என்று நம்பி அந்த பெண்ணும் அவர்களோடு காரில் சென்றுள்ளார்.
செல்லும் வழியில் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை அந்த பெண்ணிற்கு அவர்கள் கொடுத்துள்ளனர். இதனை அறிந்திராத அந்த பெண்ணும் அந்த குளிர்பானத்தை அருந்தியுள்ளார். பின்பு மயக்க நிலைக்குச் சென்ற அந்த பெண்ணை இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே அந்த பெண்ணை இரண்டு பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மயக்க நிலையிலிருந்து சற்று தெளிவான அந்த பெண்ணை இருவரும் மீண்டும் காரில் அழைத்து வந்து அந்தப் பெண்ணின் வீட்டின் அருகே இறக்கி விட்டு சென்றுவிட்டனர். வீட்டிற்கு சென்றவுடன் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன் குடும்பத்தினரிடம் அவருக்கு நடந்த கொடுமையைப் பற்றி கூறியுள்ளார் இதனால் அவளது பெற்றோர் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு அவரது பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பெண்ணின் அந்த நிலைமைக்கு காரணமான அந்த இருவரின் மீதும் அவர்கள் புகார் அளித்தனர்.
மேலும் மருத்துவ பரிசோதனை செய்ததில் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு தொடர்ந்த காவல்துறையினர் அந்த இரண்டு ஊழியர்களையும் அவரது இல்லத்திற்குச் சென்று கைது செய்தனர்.