தோழியின் பிறந்த நாளுக்காக நடுரோட்டில் நெருப்பை வைத்து விளையாடிய விபரீத இளைஞர்கள்!
birthday celebration with fire
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் ஓரிடத்தில் நள்ளிரவில் தோழியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக நெருப்பு விளக்குகளை பற்றவைத்து விபத்தில் ஏற்பட்ட இளைஞர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் 3 இளைஞர்களுடன் நின்று கொண்டிருந்தார். வாகன போக்குவரத்து மிகக் குறைவாக இருக்கும் வடகோவை மேம்பாலத்தில் அவர்கள் அந்த இளம் பெண்ணின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தயாராகியுள்ளனர்.
பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமான ஒன்று. ஆனால் இவர்கள் வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகியுள்ளனர். அவர்கள் கொண்டு வந்த சிறிய அளவிலான லாந்தர் விளக்கை பற்ற வைத்தனர். பின்னர் அதற்காக வடிவமைத்த பாலித்தீன் கவரில் இணைத்து பறக்கவிட்டனர்.
ஆனால் அந்த விளக்கோ உயரே பறக்காமல் பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்லும் சாலையோரத்தில் விழுந்தது. அங்கு குடியிருப்புகள், மரங்கள் உள்ள நிலையில் நெருப்புடன் கூடிய விளக்கை பறக்க விட்டு இளைஞர்கள் பிறந்தநாளை கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வேளை காற்றின் வேகம் காரணமாக லாந்தர் விளக்கு அங்குள்ள குடிசை மீதோ அல்லது மரங்களின் மீதோ விழுந்திருந்தால் குடிசைகளின் நிலைமை என்ன ஆவது. அல்லது பாலத்தின் கீழே வாகனத்தில் செல்பவர்கள் மீது விழுந்திருந்தால் எத்தனை பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். அனால் நல்ல வேளையாக விபத்து ஏதும் ஏற்படவில்லை.
இப்படி பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி தங்கள் பிறந்தநாளை கொண்டாடுவது மிக அவசியமா? அதுவும் ஆள் நடமாட்டம் இல்லாத மேம்பாலத்தில் நள்ளிரவு நேரத்தில் ஒரு இளம் பெண்ணுடன் இருப்பது பாதுகாப்பானதா? 4 அல்லது 5 பேர் குடித்துவிட்டு அந்த பெண்ணை முற்றுகையிட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்பதை கூட அறியாமல் பெண்கள் உள்ளதை நினைக்கும் போது வேதனையை ஏற்படுத்துகிறது.