கன்ஃபார்ம் டிக்கெட் என ஆசை வார்த்தை.. ரயில் நிலையத்திலேயே இளம்பெண்ணுக்கு கொடூரம்!
கன்ஃபார்ம் டிக்கெட் என ஆசை வார்த்தை.. ரயில் நிலையத்திலேயே இளம்பெண்ணுக்கு கொடூரம்!
ஒடிசா மாநிலம் ரூர்கேலா ரயில் நிலையத்தில் கன்ஃபார்ம் ரயில் டிக்கெட் வாங்கித் தருவதாக கூறி 20 வயது இளம்பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக 54 வயதான ரயில்வே ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கபிலேஷ்வர் சிங் என்பவர் வால்வு ஆபரேட்டராக பணியாற்றி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் கூறிய தகவலின்படி, ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் தனது இரண்டு உறவினர்களுடன் பெங்களூரு செல்ல ரூர்கேலா ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர்களுக்கு கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்காத நிலையில், டிக்கெட் தொடர்பாக விசாரித்துக் கொண்டிருந்தபோது கபிலேஷ்வர் சிங் அவரை அணுகி, கன்ஃபார்ம் டிக்கெட் ஏற்பாடு செய்து தருவதாக கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, ரயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு அருகே உள்ள வால்வு ஆபரேட்டர் அறைக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்ற அவர், கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் பிரச்சினை ஏற்படும் என மிரட்டியதுடன், ரூ.2,000 பணம் தருவதாகவும் கூறியதாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பித்து தனது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் அரசு ரயில்வே போலீசில் (GRP) புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கபிலேஷ்வர் சிங்கை கைது செய்தனர். இளம்பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான ரயில்வே ஊழியர் பணியில் இருந்து உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்படாது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கலிகாலம்.... 2 குழந்தைகளின் தாயும் 18 வயது இளம்பெண்ணும் செய்த காதல் திருமணம்! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...!!!