கணவர் வீட்டில் உயிரிழந்து கிடந்த 29 வயது இளம்பெண்..! பின்னணியில் வெளிவந்த அதிரவைக்கும் காரணம்.. பகீர் சம்பவம்!!!
மகாராஷ்டிராவின் புனேவில் 29 வயது பெண் கணவர் வீட்டில் உயிரிழந்தார். வரதட்சணை கொடுமையால் மரணம் ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், திருமண மண்டபம் சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், 29 வயது இளம் பெண் கணவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயல் அக்ஷய் ஜாம்ப்ரே என்ற அந்தப் பெண்ணின் மரணத்துக்கு வரதட்சணை கொடுமையே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே, பெண்ணின் மாமனாருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
கணவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்
புனே முகுந்த் நகர் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 29 வயதான பயல் அக்ஷய் ஜாம்ப்ரேவுக்கு திருமணமாகி சுமார் 6 முதல் 7 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தம்பதிக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. நவம்பர் 2-ம் தேதி காலை 11 மணியளவில் பெண் உயிரிழந்தது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர்.
இதையும் படிங்க: மனைவியை விட 2 கடைகள் தான் முக்கியமா? மனைவியை அடித்துக் கொன்ற கணவன்..! இறுதியில் போட்ட நாடகம்... அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!!
வரதட்சணை கொடுமை என உறவினர்கள் குற்றச்சாட்டு
பயலின் கணவர் வீட்டினர் தங்க நகைகள் மற்றும் பணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தியதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நெருக்கடியே அவரது மரணத்துக்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் மாமனார் தெற்கு புனேயில் உள்ள 'ஜாம்ப்ரே பேலஸ்' என்ற திருமண மண்டபத்தின் உரிமையாளர் ஆவார்.
பயல் உயிரிழந்த செய்தி பரவியதும் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்தத் திருமண மண்டபத்தில் திரண்டனர். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கணவர் குடும்பத்தினரைத் தேடும் போலீசார்
பயலின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பெண்ணின் மரணத்துக்கான காரணம், வரதட்சணை புகாரின் பின்னணி ஆகியவை குறித்து ஒரு புறமும், திருமண மண்டபத்தில் நடந்த தாக்குதல் மற்றும் சொத்துச் சேதம் தொடர்பாக மறுபுறமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பெண்ணின் குடும்பத்தினர் அளிக்கும் புகார் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு வயது குழந்தை தாயை இழந்துள்ள நிலையில், வழக்கில் உண்மை வெளிவந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 22 வயது இளம்பெண்ணை வரதட்சணை கொடுமைபடுத்தி கழுத்தை நெரித்து கொன்ற கணவன்! அத்தை வீட்டில் அதிகாலை 5 மணிக்கு நடந்த அதிர்ச்சி...!!!