திடீரென வீசிய பலத்த காற்று! ராட்சத அலையால் கண்ணெதிரே கவிழ்ந்த படகு....துடிதுடித்த பிள்ளைகள்! மனைவியை நொடிப்பொழுத்தில் பறிகொடுத்த கணவன்! புதுச்சேரியில் பெரும் சோகம் !!!
புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியில் நடந்த படகு விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு. சுற்றுலா பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கடும் கேள்விகள் எழுந்துள்ளன.
புதுச்சேரியில் மீண்டும் ஒருமுறை படகு விபத்து சம்பவம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மகிழ்ச்சியான சுற்றுலா தருணம் சில நொடிகளில் சோகமாக மாறிய இந்தச் சம்பவம், பாதுகாப்பு நடைமுறைகள் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தியுள்ளது.
வீராம்பட்டினம் பகுதியில் கோர விபத்து
பெங்களூரு குஷால் நகரைச் சேர்ந்த விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்தனர். பல்வேறு இடங்களைப் பார்வையிட்ட பிறகு, வீராம்பட்டினம் முகத்துவாரம் பகுதியில் தனியார் சிறிய பைபர் படகில் சவாரி செய்தனர். அப்போது திடீரென பலத்த காற்று மற்றும் ராட்சத அலைகள் ஏற்பட்டதால் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெண் உயிரிழப்பு – குடும்பத்தில் சோகம்
இந்த துயர சம்பவத்தில் விஜய்யின் மனைவி சோனியா (33) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்ற ஏழு பேரும் கடலில் தத்தளித்த நிலையில், அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்டனர். சோனியாவின் மகள்கள் சந்தியா மற்றும் சக்தீஸ்வரி ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற குடும்பத்தினரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீஸ் விசாரணை தீவிரம்
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, படகு உரிமையாளர் விஜயகுமார் மற்றும் படகோட்டி தங்கமணி ஆகியோரை கைது செய்துள்ளனர். விபத்துக்குள்ளான படகுக்கு உரிய அனுமதி இருந்ததா? பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட் வழங்கப்பட்டதா? என்ற கேள்விகளில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தனியார் படகுகள் பலவும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது.
அரசு நடவடிக்கை தேவை
வீராம்பட்டினம் முகத்துவாரம் மற்றும் அரிக்கன்மேடு பகுதிகளில் அனுமதியின்றி இயங்கும் படகுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நடைபெறும் பயணங்கள் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக உள்ளன என்பது இந்த விபத்தால் வெளிப்படையாகியுள்ளது.
இந்த சம்பவம், சுற்றுலா பாதுகாப்பு என்பது வெறும் நடைமுறை அல்ல, உயிர் காக்கும் பொறுப்பு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. நீர்நிலைச் சுற்றுலாக்களில் ஈடுபடும் போது அரசு கண்காணிப்பும், பயணிகளின் விழிப்புணர்வும் இணைந்தால்தான் இதுபோன்ற துயரங்களைத் தவிர்க்க முடியும்.