இமாச்சலில் பயங்கரம்! 40 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து; 9 பேர் மரணம்; 51 பேர் படுகாயம்
private bus fell into river 9 dead

இமாச்சல் பிரதேசத்தில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 40 அடி ஆற்றில் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிமாச்சல் பிரதேசம் சிருமானூர் அருகே ரேணுகா தாது-நாகன் சாலையில் சிம்லாவில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. ரேணுகா ஜியில் இருந்து நாகன் செல்லும் வழியில் உள்ள ஜலால் பாலத்தில் பேருந்து சென்றுள்ளது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி 40 அடி ஆழ ஆற்றில் கவிழ்ந்தது.
பேருந்தில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்தில் மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்த 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கமிஷனர் லலித் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி உள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு 20 நாட்களுக்குள் தகவல் அளிக்க உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களுக்கு 20,000 ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் உடனடி நிவாரண நிதி அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.